" If you can dream it, you can do it."

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்

Views - 106     Likes - 0     Liked


 • லண்டன்,

  இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் இரு மாற்றமாக காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரியும் சேர்க்கப்பட்டனர்.

  தொடர்ந்து 5-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தயக்கமின்றி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அலஸ்டயர் குக்கும், கீடான் ஜென்னிங்சும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இது அலஸ்டயர் குக் பங்கேற்கும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் அவர் களத்திற்குள் நுழைந்த போது, இந்திய வீரர்கள் இருபக்கமும் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை அளித்தனர். கேப்டன் கோலி, அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

  குக்கும், ஜென்னிங்சும் பேட்டிங்கில் நிதான பாணியை கடைபிடித்தனர். வெளியே சென்ற பந்துகளை பெரும்பாலும் தொடுவதை தவிர்த்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. இந்திய பவுலர்கள் தொடுத்த தாக்குதலை முதல் ஒரு மணி நேரத்தில் எல்லா வகையிலும் சமாளித்தனர்.

  ஸ்கோர் 60 ரன்களாக (23.1 ஓவர்) உயர்ந்த போது ஜென்னிங்ஸ் (23 ரன், 75 பந்து, 2 பவுண்டரி) ஜடேஜாவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து மொயீன் அலி இறங்கினார்.

  குக்கும், அலியும் அடுத்தடுத்து வெளியேறி இருக்க வேண்டியது. குக் 37 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற துணை கேப்டன் ரஹானே தவற விட்டார். இதே போல் மொயீன் அலி 2 ரன்னில் இருந்த போது வழங்கிய கேட்ச்சை, கேப்டன் விராட் கோலி கோட்டை விட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இருவரும் தேனீர் இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். குக் தனது 57-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

  மிகவும் பொறுமையாக விளையாடிய இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். அவரது பந்து வீச்சில் அலஸ்டயர் குக் (71 ரன், 190 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். பந்து அவரது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. அடுத்த வந்த கேப்டன் ஜோ ரூட் (0) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. தொடர்ந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை (0) இஷாந்த் ஷர்மா காலி செய்தார்.

  இதனால் திடீரென சரிவுக்குள்ளான இங்கிலாந்து அணி, அதில் இருந்து மீள முடியாமல் பரிதவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 11 ரன்னிலும், மொயீன் அலி 50 ரன்களிலும் (170 பந்து, 4 பவுண்டரி), சாம் குர்ரன் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.

  ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் (11 ரன்), அடில் ரஷித் (4 ரன்) களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

  கோலிக்கு ராசியில்லாத ‘டாஸ்’

  * இந்த தொடரில் 5 டெஸ்டிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் ‘டாஸ்’ வென்றுள்ளார். 1998-ம் ஆண்டுக்கு பிறகு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்திலும் ‘டாஸ்’ ஜெயித்த முதல் கேப்டன் என்ற சிறப்பை ஜோ ரூட் பெற்றுள்ளார். அதே சமயம் லாலா அமர்நாத், கபில்தேவ் (இருவரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு ஒரு தொடரில் 5 போட்டிகளிலும் டாசில் தோற்ற முதல் இந்திய கேப்டன் கோலி ஆவார்.

  * இந்த டெஸ்டில் இந்திய அணியின் அறிமுக வீரராக ஆந்திராவைச் சேர்ந்த 24 வயதான ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டார். டெஸ்டில் கால்பதிக்கும் 292-வது இந்திய வீரர் விஹாரி ஆவார்.

  * இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் 33 வயதான அலஸ்டயர் குக், இந்தியாவுக்கு எதிராக ஆடும் 30-வது டெஸ்ட் இதுவாகும். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் 29 டெஸ்டில் ஆடியதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

  இந்திய அணி நிர்வாகம் மீது கவாஸ்கர் சாடல்

  இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வை விமர்சித்துள்ள இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டெலிவிஷன் விவாதத்தில் பேசுகையில், ‘இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மிடில்வரிசை பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். இந்தியாவில் இருந்து முச்சதம் அடித்த இரண்டு வீரர்களில் அவரும் ஒருவர். ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவதற்கு அவர் தகுதியானவர். உங்களுக்கு (கோலி-ரவிசாஸ்திரி) விருப்பமான வீரர் இல்லை என்பதால் தான் அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுக்கிறீர்கள் என்பதை அறிவேன். தன்னை ஏன் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை, அதற்கு காரணம் என்ன? என்பதை அவர் அணி நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது’ என்றார்.

  News