" Love For All, Hatred For None."

தமிழகத்துக்கு நிலக்கரி கிடைக்க மத்திய அரசு உதவி செய்யும் - பொன்.ராதாகிருஷ்ணன்

Views - 116     Likes - 0     Liked


 • நாகர்கோவில், 

  பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் மோடி பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு நிர்வாக கோளாறுதான் காரணம். எனினும் தமிழகத்துக்கு போதுமான நிலக்கரி கிடைக்க தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.

  பெட்ரோல்- டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு பொருளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அந்த குழுவினர் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை முடிவு செய்ய முடியும்.

  புழல் ஜெயிலில் முதல் வகுப்பு கைதிகளுக்கு சில சலுகைகள் இருப்பதாகவும், அந்த சலுகைகள் தான் அளிக்கப்பட்டதாகவும் சட்டத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த கருத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்.

  ஏன் எனில் நானும் ஜெயிலில் இருந்து உள்ளேன். முதல் வகுப்பு கைதியாகவும் தண்டனை அனுபவித்து இருக்கிறேன். அப்போது எந்த சலுகைகளையும் நான் பெறவில்லை. ஆனால் இப்போது ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் இருப்பதாக கூறுவது மக்களை ஜெயிலுக்கு செல்ல தூண்டுவது போல இருக்கிறது. இதனால் நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

  சென்னை துறைமுகம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது. மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடர்பாக கடந்த 10-ந் தேதி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனவே விரைவில் அந்த கூட்டம் நடத்தப்படும்.

  இரட்டை ரெயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். பாராளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பாரதிய ஜனதா தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 
   
  மாற்றுத்திறனாளிக்கு உதவி

  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகராஜா கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியை சேர்ந்த மனுவேல்ராஜன் என்பவர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

  அப்போது மனுவேல்ராஜன் கூறுகையில், என்னுடைய மகன் இருதயராஜ் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இருதயராஜை கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தேன். மகனுக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து அனுப்பிவிட்டனர். எனவே என்னுடைய மகனுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டதும் சம்பந்தப்பட்ட டாக்டரிடம் பேசிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இருதயராஜை ஆஸ்பத்திரியில் சேர்த்து முழுவதும் குணமடையும் வரையில் சிகிச்சை அளிக்கும்படி கூறினார். அப்போது மனுவேல்ராஜன் தன்னுடைய மகனையும் உடன் அழைத்து வந்திருந்தார். மத்திய மந்திரியின் இந்த செயலை கோவிலுக்கு வந்து இருந்த மக்கள் பாராட்டினர்.
  News