" “No matter how hard the past, you can always begin again.”"

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

Views - 73     Likes - 0     Liked


 • துபாய், 

  ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன. பரம எதிரிகள் மோதுவதால் வழக்கம் போல் ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு எகிறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்திக்கின்றன.

  விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காணுகிறது. ஹாங்காங்குடன் நேற்று மோதிய இந்திய அணி ஓய்வின்றி மறுநாளே பாகிஸ்தானை சந்திப்பதால் சோர்வின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது வீரர்கள் ஆடும் விதத்தில் தான் தெரிய வரும்.

  இந்திய அணி பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், டோனி, அம்பத்தி ராயுடு ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. இவர்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே இந்திய அணியின் ஸ்கோர் அமையும். பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் இடக்கை வேகப்பந்து வீச்சில் தடுமாறுவார்கள்.

  பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், உஸ்மான்கான், ஷகீன் அப்ரிடி, ஜூனைத்கான் என்று 4 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இது தவிர ஹசன் அலி, சுழற்பந்து வீச்சாளர் ஷதப்கானும் மிரட்டக்கூடியவர்கள். இவர்களின் தாக்குதலை நமது பேட்ஸ்மேன்கள் திட்டமிட்டு சரியாக சமாளிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

  தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 116 ரன்களில் சுருட்டிய பாகிஸ்தான் அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவுடன் சீறுவதற்கு காத்திருக்கிறது. அந்த அணிக்கு 2 நாட்கள் ஓய்வு கிடைத்ததால் புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைப்பார்கள். கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை சந்தித்த பாகிஸ்தான் அணி அதில் 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள்.

  சமீப காலமாக பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்-ஹக்கும், பஹார் ஜமானும் ரன்மழை பொழிந்து வருகிறார்கள். இந்தியாவுக்கு எதிராகவும் தாக்கத்தை ஏற்படுத்த தீவிரமாக உள்ளனர்.

  பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த பேட்டியில் ‘சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதை கவனத்தில் எடுத்துக் கொள்ளமாட்டோம். ஏனெனில் அது முடிந்த போன கதை. இது புதிய போட்டி. எனவே நாங்கள் புதிய வியூகத்துடன் களம் இறங்குவோம்.

  விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவர் இல்லாவிட்டாலும் இந்திய அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் கோலி இல்லாத நிலை, இந்திய அணியில் பெரிய அளவில் வித்தியாசம் எதையும் ஏற்படுத்தாது. இந்தியாவின் பேட்டிங் வரிசை வலுவானது. எனவே இது சிறந்த ஆட்டமாக இருக்கும் என்று சொல்ல முடியும். எங்களது வீரர்களுக்கு நான் சொன்ன ஆலோசனை, ‘முடிவை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக ஆடுங்கள்’ என்பது தான். கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், இந்த ஆட்டத்தை மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆட்டத்தையும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றே நினைத்து ஆடுங்கள் என்றும் சொல்லி இருக்கிறேன். மற்றவர்கள் சொல்வதுபோல் இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையிலான மோதலாக இதை நினைக்கவில்லை. பேட்டிங்கில் நாங்களும் சிறந்த நிலையில் இருக்கிறோம்’ என்றார்.

  மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் மத்தியில் கடும் கிராக்கி நிலவுகிறது. இதனால் டிக்கெட் விலையும் உயர்ந்து இருக்கிறது.

  ரூ.3 ஆயிரம் விலை உடைய பிரிமியம் வகை டிக்கெட் ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. சகல வசதிகளையும் கொண்ட சொகுசு டிக்கெட் விலை ரூ.1.15 லட்சமாகும். இந்த ஸ்டேடியம் 25 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  போட்டிக்கான வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

  இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் அல்லது மனிஷ் பாண்டே, டோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகுர் அல்லது பும்ரா, கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

  பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, ஷதப் கான், பஹீன் அஷ்ரப் அல்லது ஜூனைத் கான், முகமது அமிர், ஹசன் அலி, உஸ்மான் கான்.

  News