லாரி மோதி மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
Views - 71 Likes - 0 Liked
-
ஆரல்வாய்மொழி,
நெல்லை மாவட்டம் காவல் கிணற்றில் இருந்து தார் ஜல்லிக்கலவையை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று காலையில் ஆரல்வாய்மொழி நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரத்தில் நின்ற ஒரு ஆலமரத்தில் வேகமாக மோதியது. இதில் மரத்தின் ஒரு பகுதி முறிந்து நடுரோட்டில் விழுந்தது.
இந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்தது. டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த மரம் ரோட்டில் விழுந்தபோது வாகனங்கள் எதுவும் வராததால் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் பொக்லைன் எந்திரத்தை கொண்டுவந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.
இந்த விபத்தால் நாகர்கோவில்– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.News