" “May you live all the days of your life.” – Jonathan Swift."

குமரி கடற்கரைகளில் தாது மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் - கலெக்டரிடம் மீனவர்கள் மனு

Views - 92     Likes - 0     Liked


 • நாகர்கோவில், 

  நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார்.

  அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவி தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நலஉதவி தொகை, முதியோர் உதவி தொகை, விதவை தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 284 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அவற்றை வாங்கிய கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.கிறிஸ்டோபர் ஜெயராஜ் மற்றும் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறை மாவட்டத்துக்கு உட்பட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் அதன் இயக்குனர் அருட்பணியாளர் ஸ்டீபன் தலைமையில் அருட்பணியாளர்கள், மீனவர்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  குமரி மாவட்டத்தில் 43 கடற்கரை பங்குகள் உள்ளன. இந்த கடற்கரை பங்குகளில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனத்தின் சார்பில் கடற்கரைகளில் கனிம (தாது) மணல் எடுப்பதால் கடல் அரிப்பு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைவதோடு, பல வீடுகள் கடலால் அடித்து செல்லப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

  எனவே கனிம மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பங்கு பேரவை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வருகிற காலங்களில் மக்களின் குடியிருப்புகளை காக்கவும், புற்று நோயில் இருந்து விடுபட வேண்டிய நல் எண்ணத்தோடு இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக குமரி மாவட்டத்தில் இந்திய அரிய வகை மணல் ஆலை மூலம் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் நாகர்கோவில் வட்டாரக்குழு சார்பில் மணவை கண்ணன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  நாகர்கோவில் நகராட்சி வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள அலெக்சாந்திரா பிரஸ் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பிறகு சீரமைக்கப்பட்டது. ஆனால் சீரமைத்து சில மாதங்களே ஆன நிலையில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகில் உள்ள மழைநீர் ஓடை மணலால் நிரம்பி தண்ணீர் சீராக செல்ல முடியாமல் உள்ளது. இதனால் மழை நேரங்களில் இந்த கட்டிடம் மற்றும் வணிக வளாகங்களின் கீழ்தளம் தண்ணீரில் மூழ்குகிறது.

  இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு நகராட்சி பூங்கா முன்பு எனது தலைமையில் வருகிற 22-ந் தேதி மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  நாகர்கோவில் ஸ்காட்நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தலைமையில் சிலர் மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “பார்வதிபுரம் மேம்பாலப்பணி காரணமாக தக்கலை, திருவனந்தபுரம் மற்றும் பார்வதிபுரத்தை கடந்து செல்லும் அனைத்து இலகுரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் 25-வது வார்டு டிரைவர்ஸ் காலனி, ராஜபாதை வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த குறுக்குச்சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படுவதுடன் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்“என கூறியுள்ளனர்.

  அழகியபாண்டியபுரம் அருகே உள்ள காட்டுப்புதூர் பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர். அதில், தங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தில் குடியேற முயன்ற போது, அதில் ஏற்கனவே இருக்கும் நபர்கள் அந்த நிலத்தை தாங்கள் விலைக்கு வாங்கியிருப்பதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் கூறி எங்களை மிரட்டுகின்றனர். எனவே எங்களுக்கு வேறு மாற்று இடம் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  News