கேரளாவுக்கு கடத்துவதற்காக குளச்சலில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
Views - 73 Likes - 0 Liked
-
குளச்சல்,குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய், மணல் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறையினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.ஆனாலும், கடத்தல்காரர்கள் பொருட்களை சொகுசு கார்கள் மூலமாகவும், எல்லையோர பகுதிகளில் பதுக்கி வைத்தும் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதையும் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து சென்று பறிமுதல் செய்கின்றனர்.இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குளச்சல் கோடிமுனை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் சாக்கு மூடைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டனர்.சந்தேகம் அடைந்த அதிகாரிகள் மூடைகளை சோதனை செய்த போது, அவற்றில் 7 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை உரிமை கொண்டாட யாரும் வரவில்லை.இதையடுத்து அதிகாரிகள் குளச்சல் போலீசார் உதவியுடன் அரிசி மூடைகளை கைப்பற்றி 3 டெம்போக்களில் ஏற்றி காப்புக்காடு அரசு குடோனில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.News