கொல்லங்கோடு, அருமனை பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடையை மீறி நடைபயணம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
Views - 66 Likes - 0 Liked
-
கொல்லங்கோடு,குமரி மாவட்டத்தில் வாழ்வாதார திட்டங்களை கிடப்பில் போடும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மாவட்ட மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரசார நடைபயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அனுமதியை மீறி நடைபயணம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திட்டமிட்டனர்.அதன்படி, நேற்று கொல்லங்கோட்டில் இருந்து பிரசார நடைபயணம் தொடங்கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமோகன், வட்டார செயலாளர் ரவி, முன்னாள் வட்டார செயலாளர் சிதம்பர கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி நடைபயணம் சென்றதால் கொல்லங்கோடு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 9 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டு அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி அருமனை, குஞ்சாலுவிளையில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசார நடை பயணம் தொடங்கினர். அவர்களை அருமனை போலீசார் தடுத்து நிறுத்தி நடைபயணம் மேற்கொண்ட 50 பேரை கைது செய்து அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.இதுபோல், பூதப்பாண்டி அருகே கேசவன்புதூர் பகுதியில் இருந்து பிரசார நடைபயணம் தொடங்கியது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷாபாசி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர்களை பூதப்பாண்டி போலீசார் தடுத்து நிறுத்தி 7 பெண்கள் உள்பட 39 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பளுகலில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமையில் பிரசார நடைபயணம் செல்ல முயன்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அனந்தசேகர், மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே, நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் முயன்றனர். தொடர்ந்து, போலீசார் அனுமதியின்றி நடைபயணம் மேற்கொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனர். இதுபோல் மாவட்டத்தில் மேலும் சில இடங்களில் அனுமதியின்றி நடைபயணம் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.News