" If you can dream it, you can do it."

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்

Views - 117     Likes - 0     Liked


 • பெர்த், 

  பெர்த்தில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. பிஞ்ச், ஹாரிஸ், ஹெட் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

  ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காயத்தில் சிக்கிய ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. டெஸ்ட் வரலாற்றில், இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குவது இது 3-வது நிகழ்வாகும்.

  ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி மார்கஸ் ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். எதிர்பார்த்தது போலவே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு மின்னல் வேகத்தில் சீறியது. நன்கு பவுன்சும் ஆனது. ஆனால் புதிய பந்தை வீசிய பும்ரா, இஷாந்த் ஷர்மா இருவரின் தாக்குதலில், பேட்ஸ்மேன்களை மிரள வைக்கும் அளவுக்கு துல்லியம் இல்லை.

  இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள், வேகப்பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டனர். முதல் 11 ஓவர்களில் 45 ரன்களை திரட்டினர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வந்த வேகத்தில் ஓரளவு நெருக்கடி கொடுத்தார். பிஞ்ச் 20 ரன்னில் இருந்த போது எல்.பி.டபிள்யூ. கேட்டு டி.ஆர்.எஸ். முறைப்படி இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். ரீப்ளேயில் பந்து ஸ்டம்புக்கு மேலாக செல்வது தெரிந்ததால், இந்தியாவுக்கு ஒரு டி.ஆர்.எஸ். வாய்ப்பு வீணானது.

  39 டிகிரி செல்சியல் வெயில் வாட்டி வதைத்த போதிலும், ஆஸ்திரேலிய வீரர்கள் அவசரமின்றி நிதானமாக செயல்பட்டனர். உணவு இடைவேளையின் போது அந்த அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது.

  அதன் பிறகும் நேர்த்தியாக ஆடிய தொடக்க ஜோடியினர் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணிக்கு, ஒரு வழியாக பும்ரா முடிவு கட்டினார். அவரது பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் 50 ரன்களில் (105 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 5 ரன்னில் வீழ்ந்தார். தொடர்ந்து மார்கஸ் ஹாரிஸ் (70 ரன், 141 பந்து, 10 பவுண்டரி), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (7 ரன்) வெளியேற்றப்பட்டனர். இதில் ஹேன்ட்ஸ்கோம்ப் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி ஒற்றைக்கையால் பிடித்து பிரமிக்க வைத்தார்.

  36 ரன் இடைவெளியில் 4 விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய பவுலர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 148 ரன்களுடன் தடுமாற்றத்திற்கு உள்ளானது.

  இந்த சூழலில் 5-வது விக்கெட்டுக்கு ஷான் மார்சும், டிராவிஸ் ஹெட்டும் இணைந்து அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். மார்ஷ் 24 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் நழுவ விட்டார்.

  அணியின் ஸ்கோர் 232 ரன்களாக உயர்ந்த போது, ஷான் மார்ஷ் (45 ரன், 98 பந்து, 6 பவுண்டரி) பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஹனுமா விஹாரின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார். ஏற்கனவே ஹாரிசையும், விஹாரி தான் வீழ்த்தி இருந்தார். விஹாரியின் பந்து வீச்சை வைத்து பார்க்கும் போது, அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை சேர்த்து இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றியது. மறுமுனையில் 3-வது அரைசதத்தை பூர்த்தி செய்த டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் (80 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து நல்ல நிலையை எட்டியிருக்கிறது. கேப்டன் டிம் பெய்ன் (16 ரன்), கம்மின்ஸ் (11 ரன்) களத்தில் உள்ளனர்.

  2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

  ‘320 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம்’- விஹாரி

  முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு, 2 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் ஹனுமா விஹாரி நிருபர்களிடம் கூறுகையில், ‘2-வது நாள் ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேரம் முக்கியமானது. அவர்களை 320 ரன்களுக்கு குறைவாக கட்டுப்படுத்த விரும்புகிறோம். அவ்வாறு நடந்தால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பும். அதன் பிறகு பேட்டிங்கில் அசத்தினால் நமக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

  கடினமான இந்த ஆடுகளத்தில் பேட்டிங்கில் நமது வீரர்கள் முடிந்த அளவுக்கு மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். அடிலெய்டு டெஸ்டின் 2-வது இன்னிங்சில் எப்படி ஆடினோமோ அதே போன்று செயல்பட வேண்டும். ஒவ்வொரு பந்தாக கணித்து ஆட வேண்டியது முக்கிய அம்சமாகும். முந்தைய பந்தில் எப்படி ஆடினோம் என்று சிந்தித்து கொண்டிருந்தால் அடுத்த பந்தை கச்சிதமாக எதிர்கொள்ள முடியாது. அதனால் முந்தைய பந்து பற்றிய எண்ணம் மனதில் இருக்கக்கூடாது.’ என்றார்.

  ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டுவார் என்று கூறியுள்ள அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் ‘ஆடுகளத்தில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆவதால், நாதன் லயன் மிகவும் உற்சாகமாக பந்து வீசுவார். இங்கு பவுலிங் செய்வதற்கு அவர் ஆர்வமுடன் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை

  News