" “If opportunity doesn't knock, build a door.”"

டோனிக்கு எதிராக விளையாட ஆர்வமாக இருக்கிறேன்’ ரூ.4.80 கோடிக்கு விலை போன சிம்ரன் சிங் பேட்டி

Views - 259     Likes - 0     Liked


  • மும்பை, 

    ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ரூ.4.80 கோடிக்கு விலை போன பஞ்சாப்பை சேர்ந்த விக்கெட் கீப்பர் சிம்ரன்சிங், டோனியை எதிர்த்து விளையாட ஆர்முடன் இருப்பதாக கூறியுள்ளார்.

    சிம்ரன் சிங்குக்கு ரூ.4.80 கோடி

    12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 60 வீரர்கள் ரூ.106 கோடியே 80 லட்சத்திற்கு ஏலம் போனார்கள். பிரபலமில்லாத இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ அடித்தது தான் இந்த ஏலத்தின் சிறப்பம்சமாகும்.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் முதல்தர கிரிக்கெட் போட்டியிலோ அல்லது எந்த ஒரு அதிகாரபூர்வ 20 ஓவர் போட்டியிலேயோ இதுவரை ஆடியது இல்லை. ஜூனியர் மட்டத்தில் விளையாடி வருகிறார். ஆச்சரியப்படும் வகையில் அவரை ரூ.4.80 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வசப்படுத்தியது.

    ஜூன் மாதம் உள்ளூரில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான (23 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் சிம்ரன் சிங் 301 பந்துகளில் 298 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். இதை கவனத்தில் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம், கடந்த செப்டம்பர் மாதம் அவரை பயிற்சி முகாமுக்கு அழைத்திருந்தது. அப்போது 10 ஓவர்களில் 100 ரன்கள், 8 ஓவர்களில் 75 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இரண்டு வகையான சவால் கொடுக்கப்பட்டது. இந்த போட்டிகளில் முறையே 19 மற்றும் 29 பந்துகளில் சிம்ரன்சிங் அரைசதம் விளாசினார். அப்போதே அவரை பஞ்சாப் அணி குறி வைத்து விட்டது.

    டோனியுடன்...

    பிரப்சிம்ரன்சிங்கின் உறவினர் 20 வயதான அன்மோல்பிரீத்சிங். இருவரும் எப்போதும் இணைந்தே பயிற்சி மேற்கொள்வார்கள். ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக ஆடும் அன்மோல்பிரீத்சிங்கை ரூ.80 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இருவரும் மூன்று நேரம் பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது, உறவினர்கள் திரண்டு விட்டனர். அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    18 வயதான பிரப்சிம்ரன் சிங் கூறுகையில், ‘எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 10 வயது இருக்கும்போது முதல் முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் பார்த்தேன். டோனி, கில்கிறிஸ்ட் ஆட்டத்தை பார்த்தேன். அவர்களை போல் நானும் வர வேண்டும் என்று கனவு கண்டேன். ஐ.பி.எல். போட்டியில் டோனிக்கு (சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்) எதிராக விளையாட ஆர்வமுடன் உள்ளேன். அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவரை ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் விக்கெட் கீப்பிங் தொடர்பாக சில யோசனைகளை வழங்கினார். அவரை எதிர்த்து ஆட இருப்பது வித்தியாசமான உணர்வை தரும்’ என்றார்.

    வருணின் முன்மாதிரி யார்?

    சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணி சொந்தமாக்கியது. சர்வதேச கிரிக்கெட் பக்கமே போகாத வருண் சக்ரவர்த்தியின் தொடக்க விலை ரூ.20 லட்சம் தான். ஏலத்தில் மெகா தொகைக்கு விற்கப்பட்டதும், அதாவது நேற்று முன்தினம் மாலையில் இருந்து அவரது செல்போன் ஓய்வே இல்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    வருண் சக்ரவர்த்தி பஞ்சாப் அணிக்கு தேர்வானதும், அந்த அணியின் கேப்டனான ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். வருண் சக்ரவர்த்தி, ‘தினத்தந்தி’ நிருபரிடம் பேசும் போது, ‘எல்லையில்லா சந்தோ‌ஷத்தில் திளைக்கிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தான் இந்த அளவுக்கு முன்னேறியதற்கு முக்கிய காரணம். சுழற்பந்து வீச்சில் கும்பிளேவை முன்மாதிரியாக கொண்டுள்ளேன். பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இருப்பது, எனக்கு பயனுள்ளதாக இருக்கும். பெரிய தொகைக்கு விலை போனதால், எதிர்பார்ப்பும், நெருக்கடியும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதை திறம்பட சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியில் இடம் பிடித்து ஆட வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்’ என்றார்.

    16 வயது வீரருக்கு....

    மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரையாஸ் ராய் பர்மனை பெங்களூரு ராயல சேலஞ்சர்ஸ் அணி ரூ.1½ கோடிக்கு இழுத்தது. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக அதிக விக்கெட்டுகள் (11 விக்கெட்) வீழ்த்தியவரான ராய் பர்மனின் தற்போதைய வயது 16 ஆண்டு 56 நாட்கள். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடங்கும் போது அவர் 17 வயதை கூட நிறைவு செய்திருக்கமாட்டார். அதனால் 2019–ம் ஆண்டு ஐ.பி.எல்.–ல் அவர் விளையாடினால் குறைந்த வயதில் ஐ.பி.எல். போட்டியில் ஆடியவர் என்ற பெருமையை பெறுவார்.

    News