" “May you live all the days of your life.” – Jonathan Swift."

மெல்போர்ன் டெஸ்ட்: 151 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா

Views - 68     Likes - 0     Liked


  • இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
     
    மெல்போர்ன்,
     
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் (106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் 82 ரன்கள், ரோகித் சர்மாவின் 63 ரன்கள் ஆகியவற்றின் உதவியால்  400 ரன்களை கடந்தது.  169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை  ‘டிக்ளேர்’ செய்தது. மெல்போர்னில் இந்தியாவின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 
    பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி ஆடியது. எஞ்சிய 6 ஓவர்களை ஆரோன் பிஞ்ச் (3 ரன்), மார்கஸ் ஹாரிஸ் (5 ரன்) ஜோடி சமாளித்துக் கொண்டது. ஆட்ட நேர முடிவில் அவர்கள் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து இருந்தனர்.
     
    3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளித்தார். 
     
    22 ரன்கள் சேர்த்து இருந்த மார்கஸ் ஹாரிஸ் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிஞ்ச் 8 ரன்களில் இஷாந்த் ஷர்மா பந்தில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும் நீடிக்கவில்லை. 21 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட ஷான் மார்ஷ் 61 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.  டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் பும்ரா பந்தில் கிளீன் போல்டு ஆனார். மிட்செல் மார்ஷ் 8 ரன்களில் ஜடேஜா பந்தில் விக்கெட்டை தாரை வார்த்தார். 
     
    கடைநிலை பேட்ஸ்மேன்களை பும்ரா வந்த வேகத்தில் பெவிலியன் அனுப்பினார். இதனால், 66.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின் தங்கியுள்ளது. 
    News