குமரி கடல் பகுதியில் கணவாய் மீன்கள் பிடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
Views - 262 Likes - 0 Liked
-
குமரி மாவட்ட கடல் பகுதியில் கணவாய் மீன்கள் பிடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்கள் வாங்கி பேசினார்.கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் தீபா (கன்னியாகுமரி), மோகன்ராஜ் (நாகர்கோவில்), கடல் அரிப்பு தடுப்பு கோட்ட செயற்பொறியாளர் கிறிஸ்டோபர் நேசகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-கடலோர மீனவ கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சுனாமி அவசரகால நிதி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் கடலோர கிராம கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டது. இந்த திட்டத்தில் 13 கிராமங்களுக்கு மட்டுமே கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள கிராமங்களிலும் முழுமையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் கடற்கரை கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த திட்டம் ஆய்வு செய்யப்பட வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கணவாய் மீன் பிடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே கணவாய் மீன்கள் பிடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மணவாளக்குறிச்சி- குளச்சல் பாலம் பழுதடைந்துள்ளது. உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தெரிவித்தோம். 15 நாட்களில் சரிசெய்கிறோம் என்றார்கள். ஆனால் இன்னும் சரிசெய்யப்படவில்லை.மணவாளக்குறிச்சி மணல் ஆலையின் விதிமீறல் தொடர்பாக பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேர் மாயமாகி விட்டார்கள். இதுதொடர்பாக அவர்களது குடும்பத்தினர் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு இறப்புச்சான்று மற்றும் இழப்பீடு, நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.பேரிடர் குழு கலைக்கப்பட்டு புதிதாக ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த குழு என்ன ஆனது? இந்த குழுவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். மீனவர்களின் வள்ளங்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான மண்எண்ணெய் முறையாக வழங்கப்படுவதில்லை. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி பதில் அளித்து பேசும்போது, மாயமான மீனவர்கள் 7 பேர் தொடர்பான மனு உதவி கலெக்டர் நடவடிக்கையில் உள்ளது. விரைவில் இறப்புச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையிலான மண்எண்ணெய் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவ மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கணவாய் மீன்பிடிப்பதில் உள்ள பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் மீனவர்கள் தெரிவித்துள்ள பல்வேறு கோரிக்கைகள், குறைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள் சார்பில் நெய்தல் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் குறும்பனை பெர்லின், செயற்குழு உறுப்பினர் ஜெயசுந்தரம், மணக்குடி அலெக்சாண்டர், மிடாலம் ஜார்ஜ் ஆன்றனி, சி.ஐ.டி.யு. மீன்தொழிலாளர் சங்க செயலாளர் அந்தோணி, தூத்தூர் ஜாண் அலோசியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.News