" “If opportunity doesn't knock, build a door.”"

வெளிநாட்டு சிறைகளில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு

Views - 270     Likes - 0     Liked


  • வெளிநாட்டு சிறைகளில் வாடும் மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அவர்களுடைய குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    நாகர்கோவில், 

    தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில், வெளிநாட்டு சிறைகளில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–குமரி மாவட்டம் சைமன் காலனியை சேர்ந்த சகாய அருள் பிரின்ஸ் (வயது 23) என்ற மீனவர் குவைத் நாட்டில் சர்க்கர் என்ற இடத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 17–ந் தேதி இரவு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் ஓய்வெடுத்து கொண்டிருந்த அவர் மாயமானார். அவர் என்ன ஆனார் என்பது தெரியாமல் சக மீனவர்களும், குடும்பத்தினரும் அவதிப்படுகின்றனர். எனவே அவரை கண்டு பிடிக்க வேண்டும்.

    அதே சமயம் குளச்சலை சேர்ந்த சகாய பீட்டர் (45), கொட்டில்பாட்டைச் சேர்ந்த அமிர்தம் கார்மல் (43), பொழிக்கரையை சேர்ந்த கிறிஸ்தடிமை (23) ஆகிய 3 மீனவர்களும் சவுதி அரேபிய நாட்டில் தரீன் என்ற இடத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். கடந்த 5–ந் தேதி கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்ட இவர்களை, ஈரான் கடலோர காவல் படையினர் அத்துமீறி ஈரான் கடலுக்குள் நுழைந்ததாக கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். எனவே அவர்களை ஈரான் சிறையில் இருந்து மீட்டு உடனடியாக நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோடிமுனையை சேர்ந்த செபாஸ்கர் (27), கொட்டில்பாட்டை சேர்ந்த கபிலன் (24), புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், திலக்ராஜா ஆகிய மீனவர்கள் சவுதி அரேபிய நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்த மீனவர்கள் 4 பேரும் கடந்த நவம்பர் மாதம் 17–ந் தேதி தவறுதலாக கத்தார் நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களை அந்நாட்டு கடலோர காவல் படையினர் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 25 நாட்கள் சிறை தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அவர்களை கடல் மார்க்கமாக அரேபிய முதலாளி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு மேலும் 1½ மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலையானாலும் தனக்கு பல லட்சம் ரூபாயை கட்டினால்தான் அவர்களை நாடு திரும்ப அனுமதிப்பேன் என்று அரேபிய முதலாளி கூறி வருவதாக தெரிகிறது. எனவே அவரிடம் இருந்து மீனவர்களை மீட்டு நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் செலஸ்டின், சங்க கவுரவ தலைவர் அந்தோணி, பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், வக்கீல் மரிய ஸ்டீபன் உள்பட பலர் நேற்று கலெக்டர்  வழியாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கு ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

    கடலோர மண்டல ஒழுங்காற்று அறிவிப்பாணை– 2018 மசோதா சைலேஸ்நாயக் என்பவரது பரிந்துரைகளின்படி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா நாட்டு மக்களின் நலனைக் கருதி ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டியதாகும். இந்த மசோதா ஒட்டுமொத்தமாக கடற்கரையினரையும், கடலையும் வணிக நிறுவனங்களுக்கும், சுற்றுலா நிறுவனங்களுக்கும் கபளீகரம் செய்யும் விதமாக அனுமதி வழங்கும் ஒரு மசோதாவாகவே காணப்படுகிறது. இது மீனவர் உரிமைகளுக்கு எதிரானதும், முற்றிலும் முரணானதும் ஆகும். எனவே இதை ரத்து செய்துவிட்டு, 1991–ல் கொண்டு வரப்பட்ட ஒழுங்காற்று விதிமுறைகளின் அடிப்படையில் தேசம் முழுவதும் உள்ள மீனவ மக்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் கருத்துக்கள் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த கடலோர மக்கள் மற்றும் வாழ்வாதார சூழியல் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    News