கன்னியாகுமரியில் 60 கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
Views - 235 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி சன்னதி தெரு, சங்குத்துறை கடற்கரை பஜார், காந்தி மண்டபம் பஜார் ஆகிய இடங்களில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளன. இதில் சில கடைகள் வழிப்பாதையை மறைத்து ஆக்கிரமித்துள்ளதாகவும், அது பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் அவற்றை அகற்ற கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் அடிப்படையில் கடைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதுஇதையடுத்து குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நாகர்கோவில் சப்-கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், பகவதி அம்மன் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், தலைமை கணக்கர் ராமச்சந்திரன் ஆகியோர் சென்று கடைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அந்தந்த கடைக்காரர்களிடம் கூறினர். அதைத்தொடர்ந்து சிலர் கடைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றினர்.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாரிகள் சன்னதி தெருவில் உள்ள கடைகளில் இருந்த ஆக்கிரமிப்பை பார்வையிட்டனர். அப்போது கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குமரி மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் திரண்டனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உடனே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் வியாபாரிகள் திடீரென்று போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து வியாபாரிகளை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. எனினும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி 60 கடைகளில் ஆக்கிரமிப்பு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.News