" “If opportunity doesn't knock, build a door.”"

நாகர்கோவிலில் இருசக்கர வாகனங்களில் வந்து ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்

Views - 344     Likes - 0     Liked


  • நாகர்கோவில், 

    குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியதின் கட்டாயம் ஆகியவற்றை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் சார்பில் நேற்று காலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.

    இதில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, இந்துக்கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, திருச்சிலுவை கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரி மற்றும் அரசு போக்குவரத்துக்கழக டிரைவிங் பயிற்சி பள்ளி ஆகியவற்றை சேர்ந்த மாணவ– மாணவிகள், ஆயுதப்படை, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து தொடங்கிய பேரணி செட்டிகுளம் சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, வேப்பமூடு, கோர்ட்டு ரோடு, டதி பள்ளி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, டிஸ்டில்லரி ரோடு, வடசேரி காசிவிஸ்வநாதர் கோவில் சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு வழியாக அண்ணா விளையாட்டரங்கை வந்தடைந்தது.

    பேரணியில் பங்கேற்று நகரம் முழுவதும் சுற்றி வந்த கல்லூரி மாணவ– மாணவிகளும், போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினரும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் “தலை கவசம் உயிர்க்கவசம், அதிக சப்தம் எழுப்பாதே... மானிட ஆயுளை குறைக்காதே” “செல்போன் பேசி வாகனம் ஓட்டாதே, இருசக்கர வாகனம் இருவருக்கு மட்டுமே’’ என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் படித்து, விழிப்புணர்வு பெறும் வகையில் பேரணியில் பங்கேற்ற இருசக்கர வாகனங்கள் ஒவ்வொன்றிலும் சொருகி வைக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்களை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வழங்கினார். மேலும் 25 போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட்களும் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கம் சார்பில் 100 பேருக்கு சட்டைகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், உதவி சூப்பிரண்டு ஜவகர், நகராட்சி ஆணையர் சரவணகுமார், ஊர்க்காவல்படை ஏரியா கமாண்டனர் டாக்டர் பிளாட்பின், வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி, நாகர்கோவில் ரோட்டரி சங்க தலைவர் அனிதா நடராஜன், சமூக ஆர்வலர் பழனியாபிள்ளை, நடன கலைஞர் கமல் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    News