" “Yesterday is history. Tomorrow is a mystery. .."

நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு வார விழா ‘போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்’

Views - 101     Likes - 0     Liked


  • போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்று நாகர்கோவிலில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேசினார்.
    நாகர்கோவில், 
     
    தமிழக போக்குவரத்துத்துறை மற்றும் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கல்லூரி நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் எட்வர்ட் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அதிகாரி ராபின் பேரின்ப ஸ்மித் வரவேற்று பேசினார்.
    நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் கே.உலகநாதன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     
    விழாவில் சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
     
    இந்தியாவில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். அப்படி விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 16 ஆயிரத்து 500 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். ஆனால் 2018-ம் ஆண்டு 12 ஆயிரத்து 500 பேர்தான் இறந்துள்ளனர். போலீசார், போக்குவரத்து துறை மற்றும் கோர்ட்டு மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை யின் பயனாக விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
     
    இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 425 பேர் விபத்தில் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 பேர் விபத்தில் இறக்கின்றனர். குமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 250 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
     
    20 சதவீத விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால்தான் ஏற்படுகிறது. எனவே இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டக்கூடாது. கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். சீட்பெல்ட் அணிந்துதான் கார் ஓட்ட வேண்டும். செல்போன் பேசிக்கொண்டோ, மது அருந்தி விட்டோ வாகனங்களை ஓட்டக்கூடாது. இதுதவிர போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடித்தால் விபத்துகளை தவிர்க்கலாம்.
     
    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
     
    நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவ- மாணவிகள், போலீஸ்காரர்கள், பேராசிரியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிசு வழங்கினார். முடிவில், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி பெஜிலா டேவிட் நன்றி கூறினார்.
    News