ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2 கோடியில் கண் மருத்துவ கட்டிடம் விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்தார்
Views - 266 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் அல்லாது அண்டை மாவட்டமான நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு வருகிறார்கள். இந்த நிலையில் நோயாளிகளின் நலன் கருதி ஆஸ்பத்திரி வளாகத்தில் கண் மருத்துவ கட்டிடம் புதிதாக கட்டப்படும் என்று விஜயகுமார் எம்.பி. அறிவித்தார். இதை தொடர்ந்து ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்தன.இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய கண் மருத்துவ கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:–
தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் கண் மருத்துவ பிரிவு கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கண் குறைபாடு உள்ள ஏழை நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அதிக பணம் செலவு செய்வதில் இருந்து விடுபடலாம். இந்த புதிய கண் மருத்துவ கட்டிடத்துக்கு மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இங்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்படும். அதற்கான நவீன உபகரணங்கள் இங்கு உள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக கொண்டு வரப்படும். மேலும் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 50 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் குமரி மாவட்டத்தில் கல்வியின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை இந்தியாவின் முதன்மை மாவட்டமாக கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக கட்டப்பட்டு உள்ள கண் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதை விஜயகுமார் எம்.பி. பார்வையிட்டார்.
இந்த திறப்பு விழாவில் ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், அரசு வக்கீல் ஞானசேகர், ஆர்.பி.ஆர்.குரூப் தலைவர் பாலகிருஷ்ணன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ், கனகராஜ் மற்றும் பயிற்சி டாக்டர்கள், நர்சுகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவ படத்துக்கு விஜயகுமார் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.News