100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு: ஐகோர்ட்டு நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை கலெக்டர் அலுவலகத்தில் மனு
Views - 254 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் திங்கட்கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.அப்போது ஏராளமானோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த மனுக்கள், மாற்றுத்திறனாளி அலுவலக முன்பகுதியில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுத்தொகையும், வருவாய்த்துறையில் கருணை அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இவைகளில் 95 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த பஞ்சாயத்துக்களில் உள்ள கிராமப்புற ஏழை மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.120, ரூ.140, ரூ.150, ரூ.160 என சம்பளம் பெற்று பணி செய்கிறார்கள். இவர்கள் குளம் பராமரித்தல், குளம் ஆழப்படுத்துதல், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு பணிகள், நில அரிப்பு தடுப்புச்சுவர் கட்டுதல் போன்ற வளர்ச்சிப்பணிகளை செய்கிறார்கள். ஆனால் சில அதிகாரிகள், காண்டிராக்டர்களை வைத்து, கலெக்டருக்கு தெரியாமல் பணிகளை செய்துவிட்டு, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணி நடந்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இது மிகப்பெரிய ஊழலும், முறைகேடும் ஆகும்.
மேலும் அந்த பணியாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு அதிகாரிகள் நடத்திய முறைகேடு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். ஐகோர்ட்டு நீதிபதிகள் தலைமையில் விசாரணைகுழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருங்கல் தொழில் வர்த்தகர் சங்க செயலாளர் தாமஸ், சந்திரன், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன், பொருளாளர் ஜேம்ஸ் மார்ஷல், துணைத்தலைவர் ஜாகீர் உசேன் ஆகியோர் முகாமில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வருகிற 28-ந் தேதி கருங்கல் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் மற்றும் டெண்டர் விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி ஏலம் மற்றும் டெண்டரில் கலந்து கொள்பவர்கள் கடைகளுக்கு தகுந்தபடி தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று இணைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மிக குறுகிய காலம் என்பதால், புதிய சான்றிதழ் எடுப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள கடைகளின் எண்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஏலம் மற்றும் டெண்டர் அறிவிக்கப்படாத கடைகளும் உள்ளன. ஆகவே பேரூராட்சி அறிவித்துள்ள கடைகளின் ஏலம் விடுவதற்கான தேதியை ஒரு ஆண்டு தள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News