நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 10.35 அடியாக குறைந்தது
Views - 345 Likes - 0 Liked
-
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை உள்ளது. இந்த அணை நாகர்கோவில் மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. முக்கடல் அணை 25 அடி கொள்ளளவு கொண்டதாகும். ஆனால், அணையில் மைனஸ் 10 அடி வரை தண்ணீர் எடுக்க முடியும்.அணையில் இருந்து நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்கு தினமும் சுமார் 230 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இதனால் நாகர்கோவில் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, பின்னர், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது குடிநீர் 5 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. எனவே, முக்கடல் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டது. நீர்மட்டமும் கிடுகிடுவென குறைந்தது. நேற்றைய நிலவரப்படி அணையில் 10.35 அடி தண்ணீர் இருந்தது. இந்த தண்ணீர் மூலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) வரை குடிநீர் வழங்கலாம் என்று தெரிகிறது. கோடைமழை பொய்த்து போனால், நாகர்கோவிலுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.News