மத்திய அரசின் தவறான கொள்கையால் ரப்பருக்கு விலை இல்லாமல் போனது எச்.வசந்தகுமார் பேச்சு
Views - 296 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று கொல்லங்கோடு ஊரம்பு சந்திப்பில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திட்டக்குடி, பல்லுழி, காரோடு, சங்குருட்டி, நெய்தவிளை, புஷ்பகிரி, அடைக்காகுழி, செங்கவிளை, மங்குழி, பனங்காலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.மேலும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் செய்தனர். முன்னதாக எச்.வசந்தகுமார் ஊரம்பு சந்திப்பில் பேசும்போது கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் செல்கின்றனர். நான் வெற்றி பெற்றால் இளைஞர்கள் இங்கேயே வேலைவாய்ப்பை பெற நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் தொழில் திறன் தகுதி பெறும் வகையில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், கொள்ளை போகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால் செய்யவில்லை. அதேபோல வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக மோடி கூறினார். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. பா.ஜனதா ஆட்சியால் மக்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த சிரமங்கள் அனைத்தும் தீர கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அழகியமண்டபத்தில் நடந்த கூட்டத்தில் எச்.வசந்தகுமார் பேசும்போது, “குமரி மாவட்டம் ரப்பர் விளைகின்ற இடம். ரப்பருக்கு அருமையான விலை கிடைத்துக்கொண்டு இருந்தது. ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ரப்பரை இறக்குமதி செய்ததால் இயற்கையான ரப்பருக்கு விலை இல்லாமல் போனது. மத்திய அரசின் தவறான கொள்கையால் தான் ரப்பருக்கு விலை இல்லாமல் போனது. இதனால் ரப்பர் விவசாயிகளும், தொழிலாளிகளும் சிரமப்படுகிறார்கள். மேக் இன் இந்தியா என்று சொல்கிறார்கள். ஆனால் அனைத்து பொருட்களும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அனைத்தையும் இறக்குமதி செய்தால் நம் இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த வேலைவாய்ப்பை விட குறைவான வேலைவாய்ப்பை மோடி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்” என்றார்.News