" “It always seems impossible until it is done.”-Nelson Mandela"

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்

Views - 85     Likes - 0     Liked


  • நாகர்கோவில்,

    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18–ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

    மேலும் இந்த தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளர் காஜல், காவல்துறை பார்வையாளர் பாபுராம், செலவின பார்வையாளர்கள் மக்வானா, பியூஷ்பதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் பார்வையாளர்கள் நடத்திய ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கட்டாயம் கடைபிடிப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    அப்போது தேர்தல் பார்வையாளர்கள் கூறியதாவது:–

    தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் இதுவரை என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்? பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக்குழுவினால் பறிமுதல் செய்யப்பட்ட பணம்– பொருட்களுக்கு கணக்குகள் சரிவர வைக்கப்பட்டுள்ளதா?

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் முறையான ஆவணங்கள் வைத்திருக்காவிட்டால் அதுதொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறதா? உரிய ஆவணங்கள் இன்றி பெருமளவு பணம் கொண்டு செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தேர்தல் விதிமுறைகளின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 

    அவ்வாறு எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? தேர்தல் நடத்தை விதிகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிச் செல்ல உரிய அனுமதிக்கடிதம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அமைதியான முறையில், முறைகேடுகள் எதுவுமின்றி நடைபெற அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கி பேசினர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், உதவி கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (நாகர்கோவில்), ‌ஷரண்யா அரி (பத்மநாபபுரம்) மற்றும் போலீஸ் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    News