ஸ்டாலினின் பகல் கனவு கானல் நீராகி விடும்: மோடி மீண்டும் பிரதமராக அமரப்போவது உறுதி எடப்பாடி பழனிசாமி பேச்சு
Views - 275 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி மலர வேண்டும். நிலையான ஆட்சி மலர்வதற்கு மத்திய மந்திரியான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். நமது கூட்டணியின் சின்னம், தாமரை சின்னம். நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய உறுதியான, திறமையான, வலிமையான, தகுதி வாய்ந்த பிரதமராக திகழ்ந்து வரும் மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
நிலையான பிரதமர் இருந்தால் தான் நிலையான ஆட்சியை தரமுடியும். நாடு வளம்பெற, நாடு சிறக்க, நாட்டு மக்கள் வளமோடு வாழ மீண்டும் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இன்றைய தினம் நமது கூட்டணி ஒரு பக்கம். தி.மு.க. மற்றொரு கூட்டணி. என்னை பொறுத்தவரையில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய மனப்பான்மை உள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு அணியை அமைத்துள்ளோம். தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில், மறைந்த ஜெயலலிதா இருக்கும் போது 37 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். ஒரு இடத்தில் பா.ம.க.வும், ஒரு இடத்தில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றது.
கடந்த தேர்தலில் நாங்கள் தனி அணியாகவும், பா.ஜனதா தனி அணியாகவும் போட்டியிட்டோம். அவர்களது ஓட்டுக்களையும், நமது ஓட்டுக்களையும் சேர்த்து பார்த்தால் 70 சதவீத மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் உள்ள 39 இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திலும் ஆக 40 இடங்களிலும் நமது கூட்டணி தான் வெற்றி பெறும். நமது கூட்டணி வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள். மத்தியில் நிலையான ஆட்சி அமைவது உறுதி.
இன்றைக்கு, நமது கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக மோடி முன் நிறுத்தப்படுகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் இன்று வரை யார் பிரதமர் என்று சொல்லவில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒருவர் தான் ராகுல்காந்தி பிரதமர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த கூட்டணி கட்சியினர் யாராவது ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று சொன்னார்களா? ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொருவரும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும், உத்தரபிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியும் பிரதமர் கனவில் இருக்கிறார்கள். ஆக எல்லோருமே பிரதமர் கனவில் இருக்கும் போது, இவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும் முடியாது. தேர்தல் முடிந்த பிறகு ஒன்றாக அமர்ந்து தேர்ந்தெடுப்போம் என்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே ஒற்றுமையில்லாத இவர்கள், ஜெயித்தபிறகு எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள்.
அதனால் இந்த தேர்தலில் ஜெயிப்பது நமது கூட்டணி தான். பிரதமராக மீண்டும் அமரப்போவது நமது பிரதமர் நரேந்திரமோடி. ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம் பிரதமரை பற்றியும், என்னை பற்றியும், நமது வேட்பாளர்களை பற்றியும், நமது கூட்டணி கட்சி தலைவர்களை பற்றியும் தரக்குறைவாக பேசி வருகிறார். அவருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவர் கண்ட கனவு ஒன்றாகவும், நடப்பது வேறொன்றாகவும் ஆகி விட்டது. எனவே அவருடைய கனவு கானல் நீராகி விடும். இதனை அறிந்த அவர் பித்து பிடித்தவர் போல் பேசி வருகிறார். அவர் நல்ல நிலையில் இல்லை.
பிரதமரும், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், நாங்களும் குமரி மாவட்டத்தில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம்? எத்தனை பாலங்களை கட்டியிருக்கிறோம்? எத்தனை சாலைகளை போட்டிருக்கிறோம்? என்பதை பகிரங்கமாக சொல்கிறோம். அதைச்சொல்லி நாட்டு மக்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆனால், ஸ்டாலின் ஊர், ஊராக கதை சொல்கிறார். கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு சொல்லி என்னை பற்றி கதையாக பேசிக் கொண்டிருக்கிறார். என்னை பற்றி கதைபேசி என்ன பிரயோஜனம். நாட்டு மக்களுக்கு நல்லது செய்யுங்கள். நாட்டு மக்களுக்கு என்ன செய்தோம் என்று சொல்லி வாக்குகள் கேட்டால் பரவாயில்லை.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை மாநகராட்சியாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். அதை என்னிடம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும், நமது இயக்கத்தை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சியினரும் ஒருமித்த கருத்தோடு வலியுறுத்தினார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில், நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் உங்களது சார்பாக நான் அறிவித்தேன். அந்த அறிவிப்புக்கு இணங்க 28-2-2019 அன்று நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என்ற அறிவிக்கப்பட்டது. அதற்கு அரசாணையும் போடப்பட்டுள்ளது. ஆக நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தந்துள்ளோம்.
ரூ.251 கோடியில் ஊரக குடிநீர் திட்டப்பணிகள் இந்த மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேபோல 45 கோடி ரூபாயில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. நாகர்கோவிலில் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது மறைந்த ஜெயலலிதாவும், அவருடைய தலைமையிலான அரசும் தான் என்பதை தெரிவித்து கொள்கிறேன். நாகர்கோவிலில் முதன் முதலாக ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்ததும் ஜெயலலிதா தலைமையிலான அரசு தான். ஆக நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களின் பட்டியல் நிறைய இருக்கிறது. நேரம் இல்லாததால் அனைத்தையும் சொல்ல முடியவில்லை.
கன்னியாகுமரி சிறந்த சுற்றுலா மையம். அங்கு விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு ரோப்கார் வசதி மத்திய அரசு உதவியோடு செயல்படுத்தப்படும். ரூ.125 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல விவேகானந்தர் பாறைக்கும், அய்யன் திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் பாலம் ஒன்று சுற்றுலா மேம்பாட்டுக்காக கட்டப்படும். இன்னும் ஏராளமான திட்டங்களை அ.தி.மு.க. அரசு செய்ய இருக்கிறது. 2011, 2016-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தையுமே நிறைவேற்றி உள்ளது.
விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை அவரவர் வங்கி கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தப்படும் என்று அறிவித்து, அதை நிறைவேற்றியவர் பிரதமர் நரேந்திரமோடி. அதேபோல எல்லா குடும்ப அட்டைக்கும் தைப்பொங்கல் அன்று தைப்பொங்கல் பரிசாக தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதன்படி அனைத்து குடும்ப அட்டைக்கும் வழங்கப்பட்டது. அதேபோல் ஏழை தொழிலாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அந்த திட்டமும் தொடங்கப்பட்டது. உடனே ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்து நிறுத்த செய்து விட்டார். தேர்தல் முடிந்ததும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் வசிக்கின்ற வீடில்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அடுக்குமாடி வீடுகள் அனைவருக்கும் கட்டிக்கொடுக்கப்படும். தமிழகத்தில் வீடில்லாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே எண்ணம் உள்ள ஆட்சி அமைய திறமையான பாரத பிரதமர் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
ஏனென்றால் அவர் இந்த மண்ணின் மைந்தர். எதிர்த்து நிற்பவர் வெளியூரில் இருந்து வந்து இங்கு நிற்கிறார். அவருக்கு இந்த மாவட்டத்தை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் கிராமம், கிராமமாக சென்று அந்த மக்களுக்கு என்ன பிரச்சினை? அதை எப்படி தீர்ப்பது என்று முழுவதும் அறிந்த வேட்பாளராக இருக்கிறார். இந்த மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வசித்து, மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு தொண்டாற்றுவதில் முதன்மையான வேட்பாளராக, வெற்றி வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் திகழ்கிறார். அவரது குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும், மத்திய மந்திரியாகவும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திங்கள்சந்தையில் தனது பிரசாரத்தை முடித்தார்.
முன்னதாக அவர் தோவாளையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டி பேசுகையில், எதிர் அணியினர், இப்போது பிரதமர் யார்? என சொல்ல முடியாது என்றால், நிலையான ஆட்சியை எப்படி தர முடியும். சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் என ஒவ்வொருவருக்கும் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர்களிடம் நாட்டை கொடுத்தால் நாடு தாங்குமா. குரங்கின் கையில் பூமாலை கொடுத்தது போல் ஆகும். நம் பாதுகாப்பு முக்கியம், அப்போது தான் குமரியில், தோவாளையில் வாழ முடியும்.
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு தோவாளையில் மலர் வணிக வளாகம், ஒருங்கிணைந்த தென்னை பூங்கா, அருமநல்லூரில் நறுமண வணிக வளாகம், குலசேகரத்தில் ரப்பர் உலர்த்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாக்கப்படக் கூடாது என குளங்கள் தூர்வாரப்பட்டன. பழனி, திருச்செந்தூர் கோவில்களில் இருந்து நிதி ஒதுக்கி தோவாளையில் திருமண மண்டபம் கட்டப்படும். குமரியில் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. 2016-ல் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.
திங்கள்சந்தையில் நேற்று இரவு பிரசாரத்தை முடித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் இன்டர்நேஷனல் ஓட்டலில் தங்கினார். இன்று (வியாழக்கிழமை) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் அவர் நெல்லை மாவட்டத்துக்கு சென்று பேசுகிறார்.
முதல்-அமைச்சர் பிரசாரத்தின் போது பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.News