" Love For All, Hatred For None"

வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் பா.ஜனதா பணம் வினியோகம் சஞ்சய்தத் குற்றச்சாட்டு

Views - 128     Likes - 0     Liked


 • நாகர்கோவில்,

  நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு நேற்று அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் வந்தார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக எச்.வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். எச்.வசந்தகுமார் நல்ல மனிதர். ஏழ்மை நிலையிலிருந்து படிப்படியாக முன்னுக்கு வந்தவர். மக்களின் துன்பங்களை நன்கு அறிந்தவர்.

  தற்போது கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் பணப் பட்டுவாடா செய்து வருகிறது. இச்செயல்களை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்வதில்லை. மோடிக்கு எதிரானவர்கள், இந்தியாவிற்கும் எதிரானவர்கள் என்று உத்தரபிரதேசத்தின் முதல்-அமைச்சர் யோகி ஆதித்தியநாத் கூறியிருப்பது மக்கள் மனதை காயப்படுத்தி உள்ளது.

  மூடி மறைப்பு

  நாகர்கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா கட்சியினரின் காரில் பணம் மற்றும் பணம் வினியோகம் செய்வதற்கான டோக் கன் களை கொண்டு சென்றனர். இதனை நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் காரில் டோக்கன்கள் மட்டும் இருந்ததாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் பொய்யானது.

  பல லட்ச ரூபாய் காரில் இருந்ததாகவும், மேலும் பணப் பட்டுவாடா செய்ததற்கான துண்டு சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனின் அழுத்தம் காரணமாக காரில் பணம் இருந்த விஷயம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் பணம் வினியோகம் செய்யப்பட்டதை போன்று நாகர்கோவிலிலும் பா.ஜனதாவினர் செய்துள்ளனர்.

  முன்னேற்றம் இல்லை

  அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கியாஸ் விலையும் பலமுறை உயர்ந்துள்ளது. இது பற்றியெல்லாம் பேசாத மோடி, நாட்டிற்கு தேவையில்லா கருத்துக்களை பதிவிடுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு எந்த ஒரு உள்கட்டமைப்பும் பொன். ராதாகிருஷ்ணன் கொண்டு வரவில்லை. இந்த 5 வருடத்தில், பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளது.

  நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு வாக்களித்தால் இன்னும் பல நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுக்கு வாக்களிப்பதற்கு சமம். இதனால் நமது நாட்டின் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விடும்.

  இவ்வாறு சஞ்சய்தத் கூறினார்.

  எச்.வசந்தகுமார்

  பின்னர் எச். வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

  பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு ஏ.பி.சி.டி தெரியாது என்று கூறுகிறார். மேலும் குமரி மாவட்டத்தில் எந்த தொழிற்சாலைகளும் மூடப்படவில்லை என கூறி இருக்கிறார். கடந்த 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மயிலார் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலை 2017-ம் ஆண்டு மூடப்பட்டது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. இன்று வரையிலும் அந்த தொழிற்சாலை திறக்கப்படவில்லை. இதனால் பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. இதனை குமரி மாவட்ட மக்கள் புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.

  இவ்வாறு எச்.வசந்தகுமார் கூறினார்.

  News