" “Practice kindness all day to everybody and you will realize you’re already in heaven now.” – Jack Kerouac"

மோடியை மட்டும் நம்பி உள்ள பா.ஜனதா கட்சி தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் நடிகை குஷ்பு பேட்டி

Views - 112     Likes - 0     Liked


 • நாகர்கோவில், 

  பா.ஜனதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன. 100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றார்கள். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் கருப்பு பணம் மீட்கப்படவில்லை. இந்த தவறுகளை எல்லாம் திசை திருப்பும் வகையில் தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பா.ஜனதா தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை போன்றே உள்ளது. பா.ஜனதா கட்சி மோடியை நம்பி மட்டுமே உள்ளது. மோடி வெற்றி பெறவில்லை என்றால் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவே இருக்காது. பா.ஜனதா ஆட்சியின் போது வங்கி பணியில் தமிழகத்தை சேர்ந்த எவரும் சேர்ந்தது இல்லை. ஏன் 22 லட்சம் காலி பணியிடங்களை கூட இவர்கள் நிரப்பவில்லை. ஜி.எஸ்.டி. ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசித்து கொண்டு வந்திருக்க வேண்டும். அவசர கதியில் கொண்டு வந்ததால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

  தமிழக முதல்-அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. அவர் திணிக்கப்பட்ட முதல்-அமைச்சர். இவர்கள் 2 ஆண்டுகள் ஆட்சி நடத்தி இருக்கிறார்கள். மக்களுக்கு அவர்கள் நல்லது செய்யவில்லை. இது பற்றி கேட்டால் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று கூறினார்கள். ஆனால் இப்போது மத்திய பா.ஜனதா அரசுடனே கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். சமீபத்தில் 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதும் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். நான் 4 தேர்தல்களை சந்தித்து விட்டேன். தேர்தலில் போட்டியிடாதது எனக்கு வருத்தம் இல்லை. இந்த தேர்தலில் நான் விருப்ப மனு கூட தாக்கல் செய்யவில்லை.

  தெலுங்கானாவில் 22 லட்சம் பேருக்கு ஓட்டு இல்லை. அவர்கள் அனைவரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடந்த பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட மை உடனே அழிந்திருக்கிறது. இதனால் கள்ள ஓட்டு போடும் நிலை ஏற்படுகிறது. தேர்தல் கமிஷன் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீட் தேர்வை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அதையே மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி இருக்கிறார்.

  நாகர்கோவிலில் பா.ஜனதா பிரசார வாகனம் பிடிபட்ட போது அதில் 60 லட்சம் ரூபாய் முதல் 70 லட்சம் ரூபாய் வரை இருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் வெறும் 48 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் இருந்ததாக கூறியுள்ளனர். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடுகளில் மட்டும் தான் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகவில்லை.

  இளம் வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி தான் ஹீரோ. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். பா.ஜனதாவின் நதிநீர் இணைப்பை பற்றி மட்டும் தான் ரஜினி பேசி உள்ளார். ரஜினிகாந்த் முழு அரசியல்வாதி கிடையாது. மோடிக்கு தமிழகத்தில் போட்டியிட தைரியம் உள்ளதா?. பெங்களூருவில் யாரோ ஒருவர் என் இடுப்பில் கை வைத்தார். இதனால் அவரை அடித்தேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின்போது அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

  இதைத் தொடர்ந்து கொட்டாரம் சந்திப்பில் எச்.வசந்தகுமாருக்கு ஆதரவாக நடிகை குஷ்பு திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரசாரம் செய்தார். அப்போது, “மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் மிகவும் கஷ்டம் அடைந்துள்ளனர். கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், மானியம் சரியாக கிடைக்கவில்லை. ராகுல்காந்தி பிரதமரானவுடன் ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலர வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.

  இதைத் தொடர்ந்து சுசீந்திரம், ராமன்புதூர், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, குளச்சல், கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, ஊரம்பு, களியக்காவிளை, குழித்துறை, குலசேகரம், வேர்கிளம்பி மற்றும் தக்கலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் சென்றனர். 

  News