" Love For All, Hatred For None"

ராகுல்காந்தி பிரதமரானால் குமரி மாவட்டம் வளமாகும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் எச்.வசந்தகுமார் பேச்சு

Views - 133     Likes - 0     Liked


 • நாகர்கோவில், 

  கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். காலை 7.30 மணிக்கு முளகுமூட்டில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கிய அவர் பயணம், உண்ணாமலைக்கடை, இரவிபுதூர்கடை, பள்ளியாடி, கல்லுக்கூட்டம், காரவிளை, குலசேகரம் திருப்பு, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார்.பிற்பகல் 3 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்துச் செல்ல பிரசாரம் மேற்கொண்டார். கோட்டார், செட்டிகுளம் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பால்பண்ணை சந்திப்பு வழியாக பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், கிருஷ்ணன் கோவில் வழியாக வடசேரி அண்ணா சிலை அருகில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார். அப்போது எச்.வசந்தகுமார் பேசியபோது கூறியதாவது:-

  பெருந்தலைவர் காமராஜர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் உண்மை, நேர்மை. அதற்கு மேல் கடுமையான உழைப்பு. அரசியல் என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மோடி போல் அரசியல் செய்யக்கூடாது. இந்திய அரசியல் உலகில் மோடி மாதிரி பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்தவர் வேறு யாரும் கிடையாது.

  அதேபோல் பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அரசியலில் சாதாரண பொய் சொல்லவில்லை. இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவேன் என்று 5 ஆண்டுகள் தொடர்ந்து சொன்னார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அதை அவர் நிறைவேற்றவில்லை.

  தற்போது மீண்டும் வாக்குகளை கேட்க வருகிறார். மோடி இந்த நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று சொன்னார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் தருவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார். எனவே பொய்யர்கள் ஆளுகின்ற நாடாக இந்த நாடு இருக்கக்கூடாது. நல்லவர்கள் இருக்கிற நாடாக இருக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் உண்மை வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி மூலம் அவர் இன்றும் மக்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறார். அவர் மக்களுக்காக ஆட்சி செய்தார்.

  எனவே பொய் வெகுநாள் நீடிக்காது. உண்மை தான் வெல்லும், அந்த உண்மைக்கு சான்றாகத்தான் நாங்கள் எல்லோரும் இங்கு நின்று கொண்டிருக்கிறோம். எனவே கடுமையாக உழைத்து நீங்கள் வெற்றியை எனக்கு தரப்போகிறீர்கள். அதனால் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் காமராஜர் தொண்டனாகிய நான் சிறந்த பணிகளை ஆற்றுவேன். ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் கொண்டு வருவேன் என்று நான் கூறியிருக்கிறேன். இதனால் மீன்பிடி தொழில் மேம்படும், மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். குமரி மாவட்டத்தில் விளைகின்ற காய்கறிகள், தேன் போன்றவற்றை அனுப்பலாம். நமது மாவட்டத்தின் இடத்துக்கு ஏற்ப அந்த துறைமுகம் அமையும். அதானியும், அம்பானியும் வாழ்வதற்காக ஜனநாயகம் இல்லை. எனவே மோடி ஆட்சி இனி வராது, வரவும் விடமாட்டோம்.

  ராகுல்காந்தி பல வாக்குறுதிகளை தந்துள்ளார். அவர் தான் நாளைய பிரதமர். அவரால் குமரி மாவட்டம் வளமாக போகிறது. அப்படிப்பட்ட குமரி மாவட்டத்தை வியந்து பார்க்கும் அளவுக்கு வெற்றிக்கனியை ராகுல்காந்தி கையில் கொடுக்க வேண்டும். தற்போது எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறோம் என்பது தான் நமது கணக்கு. அனைவரும் மறவாமல் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

  இவ்வாறு எச்.வசந்தகுமார் பேசினார்.

  முன்னதாக குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

  18-ந் தேதி (நாளை) நாடாளுமன்ற தேர்தல். இது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இரு ஆட்சிக்கான மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல். கர்மவீரர் காமராஜரின் அன்பு தொண்டர் எச்.வசந்தகுமாரை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். எதிர் அணியில் போட்டியிடும் வேட்பாளர் மிகப்பெரிய பொய்யர் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இந்த வெற்றி அமைய வேண்டும்.

  மத்திய அரசை வீட்டுக்கு அனுப்பும் விதத்தில் 18-ந் தேதி நடைபெறும் தேர்தலில் நமது வேட்பாளர் எச்.வசந்தகுமாருக்கு கை சின்னத்தில் வாக்குகளை தாருங்கள்.

  இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.

  முன்னதாக காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மரியஸ்டீபன், ஸ்ரீகுமார், சிலம்பு சுரேஷ், வெற்றிவேந்தன் ஆகியோரும் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பேசினார்கள். முடிவில் தி.மு.க. நகர செயலாளர் மகேஷ் நன்றி கூறினார்.

  News