மார்த்தாண்டம் அருகே, கோவில் ஊர்வலத்துக்கு வந்த யானை திடீர் சாவு
Views - 283 Likes - 0 Liked
-
குழித்துறை,குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 44). இவர் கடந்த பல ஆண்டுகளாக 48 வயதுடைய பெண் யானையை வளர்த்து வந்தார். அந்த யானைக்கு இந்திரா என பெயரிட்டிருந்தார்.இந்த யானையை பிரதீப்குமார் கோவில் விழாக்களுக்கும், யானை ஊர்வலத்திற்கும் வாடகைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். யானையை ராஜன் என்ற பாகன் பராமரித்து வந்தார்.மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரத்தில் உள்ள பழையகாடு கிருஷ்ணன்கோவிலில் 7 நாட்கள் திருவிழா நடந்து வந்தது. நேற்று 7-வது நாள் திருவிழாவை முன்னிட்டு மாலையில் யானையுடன் ஊர்வலம் நடப்பதாக இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக யானை இந்திராவை, பாகன் ராஜன் நேற்று முன்தினம் அழைத்துச்சென்றார். அங்கு பழையகாடு கிருஷ்ணன் கோவிலுக்கு அருகே யானையை கட்டியிருந்தனர். அதற்கு தென்னை ஓலை மற்றும் இலை தழைகள், பழங்கள் போன்றவை உணவாக வழங்கப்பட்டன.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் யானை திடீரென கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடந்தது. உடனடியாக கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து பரிசோதித்து பார்த்து யானை இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த யானை மாரடைப்பினால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.யானை இறந்தது குறித்து அதன் உரிமையாளர் பிரதீப் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.இது குறித்து உரிமையாளர் பிரதீப் குமார் கூறியதாவது:-யானை இந்திராவை நான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்தேன். இந்த யானை நல்ல ஆரோக்கியத்துடன்தான் இருந்து வந்தது. அடிக்கடி கால்நடை டாக்டரை வரவழைத்து யானையை பரிசோதனை செய்து வந்தேன். கோவில் விழாவுக்கு வந்த போது கூட யானை உற்சாகமாகத்தான் நின்றது. ஆனால் யானை திடீரென இறந்தது கவலையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.News