நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்
Views - 78 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர் குழு செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் உசைன், அந்தோணி, ராஜநாயகம், மரியஸ்டீபன் உள்பட பலர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-நாகர்கோவில் நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. எனினும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. வாகன போக்குவரத்து அதிகமுள்ள நேரத்தில் மட்டும் இருந்த போக்குவரத்து நெரிசல் இப்போது சாதாரண நாட்களிலும் இருக்கிறது.குறிப்பாக கோட்டார், பீச் ரோடு, இந்து கல்லூரி வழி, வேப்பமூடு சந்திப்பு, பாலமோர் ரோடு, வடசேரி, கிருஷ்ணன்கோவில் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பது இல்லை. மேலும் இருசக்கர வாகனத்தில் ரோந்து சுற்றும் போலீசாரையும் பார்க்க முடியவில்லை.சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் வாகனங்களில் அதிக எரிபொருள் செலவாகிறது.இதற்கிடையே பாதாள சாக்கடை வேலை நடைபெறுவதால் சாலைகள் முடக்கப்படுகின்றன. ஏதாவது காரணம் காட்டி ஒரு வழிபாதையை இருவழிபாதையாக மாற்றுகிறார்கள். பல ஆண்டுகளாக முடிவுக்கு வராத பாதாள சாக்கடை திட்டம் குறித்து மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.எனவே இதுதொடர்பான ஆய்வு கூட்டத்தை உடனே நடத்த வேண்டும். அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்து பேச வேண்டும். நகரில் இரு மேம்பாலங்கள் வந்தால் போக்குவரத்து சீரடையும் என்று நினைத்தால் மேலும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News