சித்திரை திருவிழாவையொட்டி தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Views - 285 Likes - 0 Liked
-
சுசீந்திரம்,
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தெப்பத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தேரோட்டம்
9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு தட்டு வாகனங்களில் சாமி, அம்பாள், விநாயகர், அறம் வளர்த்த நாயகி அம்மாள் ஆகியோர் ரதவீதிகள் வழியாக உலா வந்து கோவிலை சென்றடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்னர், சாமி வாகனங்கள் வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 9.45 மணிக்கு சாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளினர். இதே போல் விநாயகர் இன்னொரு தேரிலும், சப்பரத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளினார்கள். அதைத்தொடர்ந்து குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார். இதில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண் மடம் திலீபன் நம்பூதிரி, கோவில் பணியாளர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு பானகாரம், மோர் ஆகியவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி வந்த தேர் பகல் 11.50 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து மாலையில் சமய சொற்பொழிவு, நள்ளிரவு சப்தாவர்ண நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.
தெப்பத்திருவிழா
10-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் சாமி அம்பாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.News