கோடை விடுமுறை நிறைவு பெறும் நிலையில் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
Views - 243 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி,
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு காலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் ஒரே இடத்தில் காண முடியும். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதுபோல், கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் காந்தி நினைவுமண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், தமிழன்னை பூங்கா, சுனாமி நினைவுபூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, கோவளத்தில் உள்ள நீர்விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா போன்றவற்றை கண்டுகளித்தனர்.
நேற்று கடல் இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தடையின்றி நடந்தது. சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
இதுபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.News