கடல் சீற்றத்தால் சேதமான இடங்களை எம்.பி., எம்.எல்.ஏ. பார்வையிட்டனர் அதிகாரிகளும் உடன் சென்று ஆய்வு
Views - 250 Likes - 0 Liked
-
கொல்லங்கோடு,
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் உருவாகியுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தின் கொல்லங்கோடு, நீரோடி காலனி, வள்ளவிளை, இரையுமன்துறை உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.கடந்த 2 நாட்களுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் நீரோடி காலனி பகுதியில் மீன் விற்பனை செய்யும் காங்கிரீட் தரை பகுதி இடிந்து விழுந்தது. நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்தநிலையில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எச்.வசந்தகுமார் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, கிள்ளியூர் தாசில்தார் கோலப்பன் உள்ளிட்டோர் பார்வையிட்டு சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது மீனவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் காரணமாக நீரோடி காலனி, வள்ளவிளை ஆகிய பகுதிகளில் ராட்சத அலையில் வீடுகள் அடித்து செல்லப்படுகிறது. எனவே, நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.News