அரசு ஆஸ்பத்திரியில் இருதய நோய் சிகிச்சை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை புதிய டீன் பேட்டி
Views - 291 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் டீனாக பணியாற்றி வந்தவர் பால சுப்பிரமணியன். இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மாற்றப்பட்டார். இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் டீன் பொறுப்பை கவனித்து வந்தார்.பின்னர் அவர் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவத்துறை தலைவர் பாலாஜி நாதன் பதவி உயர்வு பெற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீனாக நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் டீனாக பாலாஜி நாதன் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து டீன் பாலாஜி நாதன் ஆஸ்பத்திரி முழுவதும் சுமார் 3 மணி நேரம் ஆய்வு செய்தார். மேலும் டாக்டர்களிடம் சில விவரங்களை கேட்டு அறிந்தார்.
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் புதிய டீனாக எனக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது டீனாக பொறுப்பு ஏற்று உள்ளதால் ஆஸ்பத்திரியின் கட்டமைப்பு மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய தகவல்களை கேட்டு வருகிறேன். ஆஸ்பத்திரியில் உள்ள நோயாளிகளை டாக்டர் தினசரி கண்காணிக்க வேண்டும்.
மேலும் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள், என்னை எப்போது வேண்டுமென்றாலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். முதலில் இங்குள்ள இருதய நோய் சிகிச்சை பிரிவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு புதிய டீன் டாக்டர் பாலாஜி நாதன் கூறினார்.News