" “If opportunity doesn't knock, build a door.”"

கன்னியாகுமரி பகுதி மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை தளவாய்சுந்தரம் தகவல்

Views - 291     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி,

    கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:

    கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். நாளொன்றுக்கு 17 லட்சத்து 85 ஆயிரம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது 14 லட்சம் லிட்டர் குடிநீர்தான் வழங்கப்பட்டு வருகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சாலைகுளம் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தினமும் 1 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மேல கருங்குளம் கிணற்றை தூர்வாரி தண்ணீர் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நடவடிக்கை எடுக்கப்படும்

    குடிநீர் குழாய்களில் உடைப்பு மற்றும் அடைப்புகள் ஏற்பட்டு இருந்தால் அதை கண்டறிந்து சரி செய்வதன் மூலம் தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். எனவே அவற்றை அதிகாரிகள் கண்காணித்து சரிசெய்ய வேண்டும்.

    மேலும் ஓட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான வசதிகளை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் முதலில் அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த வசதிகளை ஏற்படுத்தாத நிர்வாகங்கள் மீது பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    15 நாட்களுக்குள்...

    கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படும் குடிநீரை பராமரித்து 15 நாட்களுக்குள் தட்டுப்பாடு இல்லாமல் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, பேரூராட்சி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கண்ணன், செயற்பொறியாளர் மைக்கேல் சேவியர், உதவி செயற்பொறியாளர்கள் வல்சன் போஸ், ஹரி கோவிந்த், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலளார் அழகேசன், வின்ஸ்டன், சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     
    News