" Every moment is a fresh beginning."

தலா ரூ.20 லட்சம் செலவில் 1,000 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்

Views - 94     Likes - 0     Liked


 • நாகர்கோவில், 

  குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி மாணவ–மாணவிகளுக்கு வழங்கும் விழா நாகர்கோவில் அருகே சுங்கான்கடையில் உள்ள வின்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் வரவேற்றார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் பேசினார்கள்.விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று 1500 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

  தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருங்கிணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) மாலைக்குள் அனைத்து பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும். இதற்கான ஆணையை முதன்மை கல்வி அதிகாரிக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பிறப்பித்து உள்ளேன். 2017–2018–ம் கல்வி ஆண்டில் படித்த மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று சில இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இந்த கல்வி ஆண்டில் அனைவருக்கும் மடிக்கணினி 4–ம் கட்டமாக வழங்கி முடித்த 3 மாதங்களில் அவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். இதற்கும் அரசு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் 24 ஆயிரத்து 736 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 30 கோடியே 35 லட்சத்து 84 ஆயிரத்து 928 ரூபாய் ஆகும். 

  குமரி மாவட்டத்தில் 9, 10 மற்றும் பிளஸ்–1 படிக்கும் மாணவர்களின் வகுப்பறைகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் கணினி மற்றும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும். அதோடு மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் செலவில் இந்த ஆண்டு 1,000 பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். 25 லட்சம் மாணவர்களுக்கு டேப்லெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

  தமிழகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் 100 மாணவ–மாணவிகளை தேர்வு செய்து, அவர்கள் கலை பண்பாடு, அறிவியல் மற்றும் விஞ்ஞானம் குறித்து அறிந்து கொள்வதற்காக அண்டை நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதற்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி வருகிறது. 

  1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை அனைத்து பாடத்திட்டங்களையும் 2 ஆண்டுகளுக்குள் மாற்றியமைத்த பெருமை தமிழக பள்ளி கல்வித்துறையையே சாரும். பள்ளி மாணவ–மாணவிகள் அனைவரும் கல்வியில் மட்டுமல்லாமல் இயல், இசை, நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  எனவே மாணவ–மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி இல்லை என்றாலும் மரணம் தான். முயற்சியை மேற்கொள்ளுங்கள். வெற்றியை பெறுங்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  விழாவில் நாகர்கோவில் போலீஸ் உதவி சூப்பிரண்டு ஜவஹர், மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகனன், வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி தாளாளர் நாஞ்சில் வின்சென்ட், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், குமரி கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.ராஜாராம், வீரவநாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் லதா சந்திரன் மற்றும் நகர செயலாளர் ஜெயசந்திரன், அ.தி.மு.க. மேற்கு மாவட்ட அவை தலைவர் சிவகுற்றாலம், வக்கீல் ராஜகோபால், பூங்கா கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  News