" If you can dream it, you can do it."

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் கே.எஸ்.அழகிரி பேட்டி

Views - 144     Likes - 1     Liked


 • நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
  நாகர்கோவில்,

  மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி குமரி மாவட்டத்தில் அக்டோபர் 2-ந் தேதி பாத யாத்திரை நடைபெற உள்ளது. மேலும் சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் 150 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு வருகிறது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. 2021-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிச்சயம் அமையும்.
  நாங்குநேரி சட்டசபை தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார். அதே சமயத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவை தோற்கடிக்க ஒரு வலிமை வாய்ந்த வேட்பாளர் தேவைப்பட்டார். எனவே தான் கட்சியின் தலைமை அவரை கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தியது. நாங்குநேரி சட்டசபை தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக வைகோ பிரசாரம் செய்வார். அவருக்கும், எங்களுக்கும் எந்த பகையும் இல்லை. அகில இந்திய தலைவர்கள் பிரசாரத்துக்கு வருவார்கள். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம். வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

  பொருளாதார சரிவு

  நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதார கொள்கை தவறான பாதையில் செல்கிறது. நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்தால் மட்டும் அதை சரி செய்ய முடியாது. மத்திய அரசு திறமையற்ற அரசாக இருக்கிறது. வாகன உற்பத்தி தொழிலில் ஏற்பட்ட பாதிப்பால் 4 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள். ஒரு தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் 10 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தி உள்ளது.

  வாடகை கார்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் வாகன உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது. எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்கிறார்கள். ஆனால் அந்த பணம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களின் பணம் ஆகும். அந்த பணத்தை முதலீடு செய்வது ஏழைகளை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 10 சதவீத ஜி.எஸ்.டி. குறைப்பை நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இது தனிமனித வளர்ச்சிக்கு உதவும். நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது.அமித்ஷா பயந்துவிட்டார்

  இந்தியாவில் பொதுமொழியாக ஒரு மொழி இருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். என்னை பொருத்த வரை இயற்கையாகவே இந்தியாவில் ஒரு மொழி கொள்கை சாத்தியமில்லாதது. இந்தி பேசக் கூடிய மக்கள் பரவலாக இருக்கிறார்கள். ஆனால் இந்தி பேசாத மக்கள் அதிகம் உள்ளனர். நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. அதே சமயத்தில் இந்தியை திணிக்க கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம்.

  பா.ஜனதாவின் மிரட்டலுக்கு தி.மு.க. பயந்துவிட்டதாக அமைச்சர் செல்லூர்ராஜூ கூறியிருக்கிறார். தி.மு.க.வை பா.ஜனதாவால் ஒரு போதும் மிரட்ட முடியாது. தான் பேசிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷா அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். எனவே மு.க.ஸ்டாலின் போராட்டத்தால் உள்துறை மந்திரி அமித்ஷா பயந்துவிட்டார் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

  அரசு தேர்வு

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் கொண்டுவரப்பட்ட முதலீடு பற்றி சரியாக தெரியவில்லை. இதுதொடர்பாக சில கேள்விகளை கேட்டோம். ஆனால் அதற்கு பதில் இல்லை. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய கார் கம்பெனிகள் தங்களுடைய 2-வது தொழில் உற்பத்தி நிறுவனத்தை ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களில் நிறுவுகின்றன. ஆனால் தமிழகத்தில் அதை நிறுவவில்லை. அதற்கு காரணம் அமைச்சர்களின் தொந்தரவு தான். இதுபோன்ற பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். தமிழர்களின் வேலைவாய்ப்பு சுரண்டப்படுவதாக கூறுகிறீர்கள். அந்தந்த மாநில மொழிகளிலேயே அரசு தேர்வுகளை எழுதினால் அது மாற்றப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  ஆலோசனை கூட்டம்

  இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் காந்தி பிறந்தநாள் விழா பாத யாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

  தேசிய செயலாளர் சஞ்சய்தத், வசந்தகுமார் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  சலசலப்பு

  கூட்டத்தில் தேசிய செயலாளர் சஞ்சய்தத் ஆவேசமாக பேசினார். அப்போது “மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க பாடுபடுவோம்“ என்று கூறினார். இதைக்கேட்டதும் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென கூச்சலிட்டனர். அதன்பிறகு தேசிய செயலாளர் சஞ்சய் தத் பேச்சை மாற்றினார். அதன்பிறகு தொண்டர்கள் அமைதி ஆனார்கள். இச்சம்பவத்தால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 


  News