தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஏன்? - கேப்டன் விராட்கோலி விளக்கம்
Views - 279 Likes - 0 Liked
-
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி விளக்கம் அளித்துள்ளார்.பெங்களூரு,
தென்ஆப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் காஜிசோ ரபடா 3 விக்கெட்டும், ஜோர்ன் போர்ச்சுன், பீரன் ஹென்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் குயின்டான் டி காக் 79 ரன்னுடனும், பவுமா 27 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இதனை அடுத்து இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது விமர்சனத்துக்கு உள்ளானது. தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டியது அவசியமானதாகும். போட்டி தொடங்கும் முன்பு எதுவும் உத்தரவாதம் கிடையாது. அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஒரே மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ளாமல் புதிய அணுகுமுறையை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் தான் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். இதுபோன்ற முயற்சியில் எதிரான முடிவு அமையும் போது அதற்கு தகுந்த பதில்களை கண்டுபிடிக்க முடியும்.
சிறந்த அணி சேர்க்கையை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். நம்மிடம் நல்ல பேட்டிங் வரிசை இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்தால் நாம் நன்றாக செயல்படுகிறோமா? அல்லது முதலில் பந்து வீசினால் சிறப்பாக செயல்படுகிறோமா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாட நாம் தயாராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
இந்த ஆடுகளத்தில் 134 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் கிடையாது. போதுமான ரன் எடுக்காத நிலையில் நமது பவுலர்கள் இந்த ஸ்கோருக்குள் எதிரணியை கட்டுப்படுத்தாதது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியமில்லை. போதிய ஸ்கோர் எடுக்காத போது பந்து வீச்சாளர்களுக்கு எப்பொழுதும் நெருக்கடி இருக்க தான் செய்யும். 20 ஓவர் போட்டியில் ஒன்றிரண்டு ஓவர்கள் சரியாக அமையவில்லை என்றாலே ஆட்டத்தின் போக்கு மாறிவிடும்.
இந்த போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் பிட்ச்சின் தன்மையை அறிந்து அதற்கு தகுந்தபடி துல்லியமாக பந்து வீசினார்கள். நாங்கள் இன்னும் ஒரு சில விஷயங்களை வலுப்படுத்த வேண்டும். அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்று நினைத்து நாங்கள் செயல்பட்டோம். ஆனால் ஆடுகளம் அதற்கு அனுமதிக்காது என்பதை புரிந்து கொண்டோம். அதற்கு தகுந்தபடி வியூகத்தை மாற்றி இருக்க வேண்டும்.
20 ஓவர் போட்டியில் இலக்கை ‘சேசிங்’ செய்வது எளிதானதாகும். மற்ற வகையான போட்டிகளில் இலக்கை எட்ட பெரிய பார்ட்னர்ஷிப் அவசியமாகும். ஆனால் 20 ஓவர் போட்டியில் 40-50 ரன் பார்ட்னர்ஷிப் அமைந்தால் கூட ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். உள்ளூர் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தான் அணியில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சீரற்ற வீரர்களை வைத்து விளையாடுகிறோம் என்று நினைக்க வேண்டாம். மேலும் இது ஒரு இளம் அணி. இளம் வீரர்கள் நல்ல நிலையை எட்ட சிறிது காலம் அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு விராட்கோலி கூறினார்.
வெற்றிக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குயின்டான் டி காக் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டது. எங்கள் பந்து வீச்சாளர்கள் ஆரம்ப சறுக்கலில் இருந்து மீண்டு வந்தது சிறப்பானதாகும். எங்கள் வீரர்கள் சூழ்நிலையை நன்கு புரிந்து எங்களது திட்டத்தை சரியாக அமல்படுத்தி இந்திய அணியினருக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணியினர் முதல் 4 ஓவர்களில் எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அவர்கள் மோசமான பந்துகளை அதிகம் வீசவில்லை. பந்தும் நன்கு ஸ்விங் ஆனது. நாங்கள் நெருக்கடியை நீர்த்து போகச் செய்யும் வகையில் பேட்டிங் செய்தோம். பீரன் ஹென்ரிக்ஸ் சிறப்பாக பந்து வீசினார். அவர் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு பெறுவதற்கு தகுதி படைத்தவர். எங்கள் அணியினரின் பீல்டிங் கவரும் வகையில் இருந்தது. இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்News