வெளிநாட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்த போது புயலில் சிக்கிய குமரி மீனவர் உள்பட 11 பேர் கதி என்ன? கலெக்டரிடம் மனு
Views - 100 Likes - 0 Liked
-
வெளிநாட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்த போது புயலில் சிக்கிய குமரி மீனவர் உள்பட 11 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில்,குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மீனவர் சிலுவைதாசன் (வயது 59). இவர் ஏமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 17-ந் தேதி அப்துல் ஹமீது என்ற அரேபியரின் விசைப்படகில் சிலுவைதாசன், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாழையை சேர்ந்த கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன், மற்றொரு காசிலிங்கம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் 11 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்கடந்த 23-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்த போது ஏற்பட்ட புயலில் அவர்களுடைய படகு சிக்கியுள்ளது. இந்த புயலில் 11 மீனவர்களும் படகோடு மாயமாகியுள்ளனர். இதுவரை கரை திரும்பாததால் அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இதையறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்தநிலையில் மாயமான மீனவர்களை உடனடியாக விரைந்து கண்டுபிடித்து மீட்குமாறு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் சிலுவைதாசனின் மனைவி புஷ்பலீலா மற்றும் அவருடைய மகன், மகள், உறவினர்கள் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது, வெளிநாட்டில் கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு புஷ்பலீலாவும், அவருடைய பிள்ளைகளும் கண்ணீர் மல்க கூறினர்.News