டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மாணவிக்கு தங்க பதக்கம்:உடற்கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; 7,889 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் வழங்கினார்
Views - 86 Likes - 0 Liked
-
உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழாவில், 7,889 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டங்கள் வழங்கினார். அதில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவிக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.சென்னை,காஞ்சீபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருது பெற்றவரும், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான வா.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார்.இதில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ் குமார், பல்கலைக்கழக துணைவேந்தர் ஷீலா ஸ்டீபன், பதிவாளர் வே.கோபிநாத், துணை செயலாளர் சி.முத்துக்குமரன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், உறுப்பு கல்லூரிகளின் முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் 2017-2018, 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் படித்த 7 ஆயிரத்து 889 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.பட்டம் பெற்றவர்களில் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்(பிஎச்.டி.) 41 பேர், ஆய்வியல் நிறைஞர் பட்டம்(எம்.பில்) 79 பேர் உள்பட மொத்தம் 151 மாணவ-மாணவிகள் நேரடியாகவும், 7 ஆயிரத்து 738 மாணவ-மாணவிகள் தபால் மூலமாகவும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். நேரடியாக பட்டம் பெற்ற 151 பேரில், 31 பேர் தங்க பதக்கத்துடன் கூடிய பட்டங்களை பெற்றனர்.அதில் திருச்செந்தூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவி டி.சபினா பாக்கியவதியும் ஒருவர் ஆவார். இவர் ஆய்வியல் நிறைஞர் படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக வந்ததற்காக இந்த பதக்கம் வழங்கப்பட்டது.ஏற்கனவே, இளங்கலை உடற்கல்வியியல் (2014-2015) படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவியாக வந்தததற்கு தங்க பதக்கத்தை அப்போது பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமாக இருந்த ரோசய்யாவிடம் பெற்று இருந்தார்.பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் வா.பாஸ்கரன் பேசியதாவது:-உள்நாட்டு விளையாட்டுகளில் பிரசித்தி பெற்ற சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருந்தபோதிலும் ஒலிம்பிக், ஆசிய போட்டி, சர்வதேச கால்பந்து சங்க சம்மேளன போட்டி, உலக தடகள போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் நம்முடைய நாட்டின் பிரதிநிதித்துவம் சீரற்ற நிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் விளையாட்டு துறையில் தற்போது நிலவும் சூழல் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்கொணருவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகள் மூலமாக விளையாட்டு துறையில் நாம் புதிய பரிணாமத்தை எட்டி பிடிப்போம் என்பதில் ஐயமில்லை. உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடி நாம் முன்னேறி, நல்ல இடத்தை பிடிப்பதற்கு இதுதான் சரியான தருணம்.இவ்வாறு அவர் பேசினார்.News