பத்மநாபபுரம்,
தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தக்கலை, குமாரபுரம், வில்லுகுறி, செருப்பாலூர், பொன்மனை போன்ற பகுதிகளில் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும், அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்தநிலையில் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொசு வலை போர்த்தப்பட்ட படுக்கை வசதி உடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது தனிவார்டில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 7 பேர் பொதுவார்டில் கொசு வலை உடன் கூடிய படுக்கையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், கல்லூரி பேராசிரியர் உள்பட பலர் உள்ளனர்.