குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் 6,712 பேர்; அதிகாரி தகவல்
Views - 316 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 95 பஞ்சாயத்து தலைவர்கள், 984 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 11 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 111 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தேர்தல் திருவட்டார், மேல்புறம், குருந்தன்கோடு, தக்கலை மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அகஸ்தீஸ்வரம், முஞ்சிறை, தோவாளை மற்றும் கிள்ளியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 110 பேர் வாக்களிக்கிறார்கள்.இதற்காக 864 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 149 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் தயார் நிலையில் உள்ளன. வெள்ளை, பிங்க், பச்சை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளன.இந்த தேர்தலில் தமிழகத்திலேயே முதல் முறையாக மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இங்கு மொத்தம் 114 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாதிரி மின்னணு வாக்குச்சாவடி அமைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு கட்டுப்பாட்டு எந்திரத்தில் 4 வாக்குப்பதிவு எந்திரங்களை இணைத்து தேர்தல் நடைபெறும்.குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 6,712 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது. 2-ம் கட்ட பயிற்சியானது 24-ந் தேதி நடைபெறும். அதன்பிறகு 26 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கையானது 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மின்சார வசதி, பாதுகாப்பு அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா? என்று ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.News