" “If opportunity doesn't knock, build a door.”"

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் விவேகானந்தரின் கருத்துகளை பரப்ப வேண்டும் ஜனாதிபதி பேச்சு

Views - 324     Likes - 0     Liked


 • இந்தியாவின் அனைத்து இடங்களிலும் விவேகானந்தரின் கருத்துகளை பரப்ப வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
  நாகர்கோவில்,

  கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கன்னியாகுமரி வந்தார். மாலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்த்தார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.இதனையடுத்து நேற்று காலையில் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா நிகழ்ச்சி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் உள்ள ஏக்நாத் அரங்கில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக காலை 9.30 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனி கார் மூலம் சென்றார். அவருடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவாதி கோவிந்த் ஆகியோரும் சென்றனர்.

  கண்காட்சி கூடம்

  அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை விவேகானந்த கேந்திரா துணை தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவ், இணை பொதுச்செயலாளர் பிரவின் தபோல்கர் ஆகியோர் வரவேற்றனர். முதலில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்றார். அங்கு ராமாயணத்தை விளக்கும் தத்ரூப காட்சிகளை பார்த்து ரசித்தார். பின்னர் பாரத மாதா கோவிலுக்கு சென்று பாரத மாதா சிலையை வணங்கினார். அங்கிருக்கும் சிற்பங்களையும் பார்த்தார்.

  இதைத் தொடர்ந்து விழா நடைபெறும் ஏக்நாத் அரங்குக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

  ஆன்மிக புரட்சிகன்னியாகுமரியில் கடலில் உள்ள பாறையில் தான் 1892-ம் ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார். இங்கு தான் 3 பகல் மற்றும் 3 இரவுகள் தனியாக சன்னியாசி கோலத்துடன் இருந்து தவம் செய்து உலகத்திற்கு பாரத பண்பாட்டையும், கலாசாரத்தையும் வெளிகொணர உந்துதல் சக்தி பெற்றார். இங்கு தான் அவர் ஆன்மிகப் புரட்சி ஏற்படுத்த ஞானம் பெற்றார். தனிநபர் விடுதலைக்காக மட்டுமின்றி தாய்நாடு புத்துணர்ச்சி பெறவும் மக்களுக்கு சேவை செய்யவும் ஆற்றல் பெற்றார்.

  1894-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி அவர் எழுதிய கடிதத்தை நினைவு கூறுகிறேன். அதில் அவரது பணியை கூறியுள்ளார். தன்னலமற்ற சன்னியாசிகள் கிராமங்கள் தோறும் சென்று மக்களுக்கு படிப்பறிவை கொடுத்து அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த முயல வேண்டும் என்று கூறுகிறார்.

  தனித்துவத்தை இழந்து விட்டோம்

  நாம் நம் நாட்டின் தனித்துவத்தை இழந்து விட்டோம். அதனாலேயே நாம் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளோம். நம் நாடு இழந்த தனித்துவத்தை மீண்டும் பெற்று மக்களை உயர்த்த வேண்டும். கன்னியாகுமரிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வமத மகா சபையில் விவேகானந்தர் ஆற்றிய உரை சிறப்புமிக்கது. அங்கு கூடியிருந்த சர்வ மத தலைவர்கள் முன், உலகத்தில் அமைதியை விரும்பும் மற்றும் எல்லோரும் சமம் என்ற கொள்கையை உடைய இந்து மதத்தை சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். 1963-ம் ஆண்டு விவேகானந்தரின் நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் போது கன்னியாகுமரி மக்கள் உலகமே அறியாமல் இருந்த சன்னியாசி, பின் உலகிலேயே தலைசிறந்த ஆன்மிக தலைவரான விவேகானந்தருக்கு ஒரு நினைவுச்சின்னம் பாறையில் எழுப்ப வேண்டும் என எண்ணினார்கள். விவேகானந்தர் பாறைநினைவாலயம் வர காரணமாக இருந்தவர் ஏக்நாத் ரானடே ஆவார்.

  புண்ணிய பூமி

  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் பரந்துள்ளது. வடக்கே இமயமலை கம்பீரமாக உள்ளது. தெற்கே பிரம்மிப்பை ஏற்படுத்தும் விவேகானந்தர் பாறை நினைவு சின்னம் உள்ளது. இமயமலையும், விவேகானந்தர் பாறை நினைவு சின்னமும் நமது இந்திய பண்பாட்டை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும் என்ற நினைவை ஏற்படுத்துகிறது. நமது வாழ்வில் நிலையற்ற தன்மை உணர்ந்து மேலான வாழ்வை வாழ இது உணர்த்துகிறது.

  விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது கருத்துகளை பின்பற்றி, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பரப்ப வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  News