மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி: மத்திய மந்திரி பிரகலாத்சிங் அறிவிப்பு
Views - 317 Likes - 0 Liked
-
இந்தியாவில் மாமல்லபுரம் உள்ளிட்ட 17 முக்கிய சுற்றுலா தலங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத்சிங் கூறினார்.
மத்திய சுற்றுலாத்துறை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாடு முழுவதும் உள்ள 17 முக்கிய நினைவிடங்கள், சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம், கர்நாடகத்தில் ஹம்பி, தாஜ்மஹால், கஜூராஹோ கோவில்கள், அஜந்தா, எல்லோரா உள்ளிட்டவை இதில் அடங்கும். இதற்கு ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறோம். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்க வேண்டும் என்று சுற்றுலா அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதற்காக ‘இ-விசா’ பெறுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டது. அதன் முடிவுகள் இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளது. ‘இ-விசா’ மூலம் சுற்றுலா வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டு 2 லட்சத்து 61 ஆயிரத்து 956 என இருந்தது, 2019-ம் ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2018-ம் ஆண்டு 10.12 லட்சமாக இருந்தது, 2019-ல் 10.92 லட்சமாக அதிகரித்துள்ளது. ‘வியக்கத்தக்க (இன்கிரிடிபில்) இந்தியா’ பிரசார இயக்கத்தின் தூதுவர் எந்த பிரபலம் என்று கேட்கிறீர்கள்? பிரதம மந்திரி தான் எங்களது தூதுவர்.
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்திப்பு நடத்திய பின்னர் அங்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவிடங்களில் ஒலி-ஒளி காட்சிகளுக்கான கருவிகள் நிறுவப்பட்டு இருந்தால் அவை இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்ற முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
News