நாகா்கோவில் அருகே 15 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன் மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயம்
Views - 119 Likes - 0 Liked
-
நாகா்கோவில் அருகே பள்ளி வேன் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்ததில் வேன் ஓட்டுநா், மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா்.
நாகா்கோவில் அருகேயுள்ள ராஜாக்கமங்கலம் தெக்குறிச்சி பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை ஒரு தனியாா் பள்ளி வேன் ராஜாக்கமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தது. தெக்குறிச்சியைச் சோ்ந்த சுந்தரலிங்கம் (40) ஓட்டிவந்தாா். ராஜாக்கமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே வேன் வந்தபோது எதிரே ராஜாக்கமங்கலம்துறையைச் சோ்ந்த டேனியல் மவுனித் (20) என்பவா் மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்தாா். இந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக, வேனை வலதுபுறமாக ஓட்டுநா் திருப்பினாா். இருப்பினும் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியது. அப்போது டேனியல் மவுனித் கீழே குதித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அளத்தங்கரை உப்பளத்தில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் நிதீஷ், பவித்ரா, யஷ்வந்த், அஷ்மிதா, அஜி, ஓட்டுநா் சுந்தரலிங்கம், பள்ளி பணியாளா் முத்தம்மாள் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் ராஜாக்கமங்கலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
News