" “If opportunity doesn't knock, build a door.”"

டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார்: குடியரசு தின விழா கோலாகலம்

Views - 283     Likes - 0     Liked


 • நமது நாட்டில் அரசியல் சாசன சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்த நாள், ஆண்டுதோறும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.


  அந்த வகையில் 71-வது குடியரசு தின விழா நேற்று (ஞாயிற்றுக் கிழமை) வழக்கமான உற்சாகத்துடனும், எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

  டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியிலும் ராஜபாதையில் குடியரசு தினவிழா கண்கவர் அணி வகுப்புடன் வண்ண மயமாக நடைபெற்றது.பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறாக அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்துவதற்கு பதிலாக, ‘இந்தியா கேட்’ அருகே அமைந்துள்ள போர் நினைவுச்சின்னத்துக்கு வந்து, நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைத்தளபதிகள் இருந்தனர்.
  40 ஏக்கர் நில பரப்பிலான இந்த போர் நினைவுச்சின்னமானது, 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனப்போர், 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர். 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போர் உள்ளிட்டவற்றில் உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.

  போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திவிட்டு பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவதற் காக ராஜபாதையில் அமைக் கப்பட்டிருந்த பிரத்யேக மேடைக்கு வந்தார். வரும்வழியில் அவர் பார்வையாளர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துக்கொண்டே வந்தார். தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து சேர்ந்தார்.
  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்து கொண்டார். அந்த நாட்டின் அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டது இது மூன்றாம் முறை.

  21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

  குடியரசு தினவிழாவின் சிறப்பு அம்சம், நமது நாட்டின் முப்படைகளின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றுகிற வகையில் அணிவகுப்பு நடைபெற்றதுதான். இந்த அணிவகுப்பில் முதல் முறையாக சினூக், அபாச்சி ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றன.
  ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ‘ஏ-சாட்’ என்று அழைக்கப்படுகிற செயற்கை கோள் தடுப்பு ஆயுத அமைப்பும், இந்த அணிவகுப்பில் முதல்முறையாக இடம் பெற்றது. எதிரிநாட்டின் செயற்கை கோளால் ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளிக்கிற ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்று இது எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

  இந்திய விமானப்படையின் ஊர்தியில் ரபேல் போர் விமானம், தேஜாஸ் விமானம், ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, அஸ்திரா ஏவுகணைகள் ஆகியவற்றின் மாதிரிகள் இடம் பெற்றிருந்தது பார்வையாளர் களை வெகுவாக கவர்ந்தது.

  கேப்டன் மிரிகாங் பரத்வாஜ் தலைமையில் தனுஷ் பீரங்கி வண்டி, இந்த அணிவகுப்பில் முதல்முறையாக இடம் பெற்றது. இது 35 கி.மீ. தொலைவில் உள்ள எதிரியின் இலக்கை வீழ்த்துகிற ஆற்றல் வாய்ந்தது.

  ராணுவ அதிகாரி கேப்டன் தன்யா செர்கில், ‘கார்ப்ஸ் ஆப் சிக்னல்கள்’ அணிக்கு தலைமை வகித்தார். 21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு அம்சமாக இந்த ‘கார்ப்ஸ் ஆப் சிக்னல்’கள் எதிரிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை மேம்படுத்துவதற்கான மின்னணு மற்றும் தகவல் மேன்மையை திறம்பட காட்டுவதாகும்.

  இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்கள் சார்பிலான அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றன.

  தமிழ்நாட்டின் சார்பில் காவல் தெய்வமான 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி பங்கேற்றது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனத்துடன் அணிவகுத்து வந்த இந்த ஊர்தி, பார்வையாளர்களின் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தாக அமைந்தது.

  பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தி, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை உலகுக்கு காட்டுவதாக அமைந்தது.
  News