" “A life spent making mistakes is not only more honorable, but more useful than a life spent doing nothing.”"

பதவியேற்று 40 நாட்கள் ஆகிறது: பஞ்சாயத்து நிர்வாக பொறுப்பை வழங்க வேண்டும் கலெக்டரிடம் தலைவர்கள் மனு

Views - 95     Likes - 0     Liked


 • நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

  அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 513 மனுக்கள் கொடுத்தனர். கணபதிபுரம் அருகே உள்ள கன்னக்குறிச்சி கீழவூர் தலைவர் ராஜதுரை தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-எங்களது ஊர் ராஜாக்கமங்கலத்தில் இருந்து குளச்சல் நோக்கி செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பல கோவில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், பள்ளி- கல்லூரிகளும் இருக்கின்றன.

  இந்தநிலையில் தற்போது கல்லுக்கட்டி மற்றும் ஸ்ரீகிரு‌‌ஷ்ணபுரம் ஊருக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு மதுபான கடை அரசு அங்கீகாரத்துடன் திறக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடை திறக்கப்பட்டால் எங்கள் ஊர் மக்களும், சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களும் பாதிக்கப்படுவர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் பெரும் அளவில் சிரமத்துக்கு உள்ளாவார்கள். எனவே மதுபான கடையை திறக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  தோவாளை யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் நெடுஞ்செழியன் (தோவாளை), கல்யாண சுந்தரம் (செண்பகராமன்புதூர்), மகே‌‌ஷ் ஏஞ்சல் (சகாயநகர்), பிராங்கிளின் (தடிக்காரன்கோணம்), சஜிதா (பீமநகரி), ரெஜினா (மாதவலாயம்), சதீ‌‌ஷ் (ஞாலம்) உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அவர்களுடன் யூனியன் கவுன்சிலர்கள் பூதலிங்கம், ஞானபாய் இம்மானுவேல், ராஜேஸ்வரி கோலப்பன் ஆகியோரும் சென்றிருந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  பஞ்சாயத்து தலைவர்களாக நாங்கள் பொறுப்பேற்று 40 நாட்கள் ஆகியும் இன்று வரை நிர்வாக ரீதியாக எந்தவித ஊராட்சி தொடர்பான மக்கள் நல வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்து தரப்படவில்லை. எந்த ஊராட்சிகளிலும் துப்புரவு பணியாளர்கள் கிடையாது. குடிநீர் பணியாளர்கள், மின்கம்பியாளர், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் தளவாட சாதனங்கள் கிடையாது. மக்களுக்கு தேவையான அவசர பணிகள் அதிகமாக செயல்படுத்த வேண்டியிருப்பதாலும், கோடைகாலம் தொடங்க இருப்பதாலும் நிர்வாகத்தை சீரமைத்து மக்கள் பணி செய்திட அரசு, பஞ்சாயத்து தலைவர்களிடம் நிர்வாக பொறுப்பை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சீலன் மற்றும் பலர் கொடுத்த மனுவில், மார்த்தாண்டம் அருகே பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஞாறாம்விளை சந்திப்பு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நேசமணி பாலம் அருகே தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டியும், தீ வைத்தும் செல்கின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாகிறது. நச்சுப்புகையால் காற்றும் மாசுபடுகிறது. எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து காற்று மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  பச்சை தமிழகம் கட்சியின் குமரி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் மிதியடிகளை பாதுகாப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை தடைவிதிக்க வேண்டும் என்றும், கோட்டார் சரக்கல்விளையைச் சேர்ந்த திருஞானசம்பந்தன் கொடுத்துள்ள மனுவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பழுதடைந்துள்ள சிலையை மாற்றி புதிதாக நிறுவ வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

  பெருந்தலைவர் மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் அன்புகிருஷ்ணன் மற்றும் பலர் கொடுத்த மனுவில், காரவிளை கால்வாயில் தண்ணீர் திறந்து விட மறுக்கிறார்கள். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் வாழை, தென்னைகளை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  மேலும் மக்கள்குறை தீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.67 லட்சம் செலவில் அதிநவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

  News