நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி தொடங்கியது
Views - 82 Likes - 0 Liked
-
மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில் 340-வது புத்தக கண்காட்சி நாகர்கோவில் கோட்டார் பயோனியர் முத்து மஹாலில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினராக கோட்டாட்சியர் மயில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் லட்சக்கணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.அதாவது ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம், அரசியல், சுய முன்னேற்றம், தமிழ்மொழி வரலாறு, கவிதைகள், உலக தலைவர்கள் வரலாறு, அகராதிகள், குழந்தைகளுக்கான கல்வி நூல்கள், பொது அறிவு, தமிழ் கலாசாரம், இயற்கை மருத்துவம், சாகித்ய அகாடமி நூல்கள் போன்ற லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்று உள்ளன. கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களும், 10 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.
‘தினத்தந்தி’ பதிப்பக புத்தகங்கள்
கண்காட்சி தொடக்க விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் தேர்வு செய்தனர். மேலும் ஆண்கள், பெண்கள் என குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களை வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. முக்கிய தகவல்கள் கொண்ட தினத்தந்தி பதிப்பக புத்தகங்கள் 12-வது அரங்கில் அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் இந்தியர்களின் விஞ்ஞானம், சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், கலாம் ஒரு சரித்திரம், நலம் தரும் மூலிகை சமையல், நீங்களும் தலைவர் ஆகலாம், இலக்கியம் போன்ற பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்று உள்ளன.
கலை நிகழ்ச்சிகள்
கண்காட்சி நாட்களில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர் சந்திப்பு, இலக்கிய உரை, விருது வழங்கும் நிகழ்வு, பட்டிமன்றம், பாட்டரங்கம், கவியரங்கம், சொல்லரங்கம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
அதன்படி நேற்று இரவில் அங்கு நடந்த நிகழ்ச்சியில் மக்கள் வாசிப்பு இயக்க நிறுவனர் வீரபாலன் அனைவரையும் வரவேற்று பேசினார். நாவலாசிரியர் பொன்னீலன், தமிழ் எழுத்தாளர் மலர்வதி, தியாகி கொடிக்கால் சேக் அப்துல்லா மற்றும் எழுத்தாளர் பெர்லின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.News