நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம்
Views - 78 Likes - 0 Liked
-
தென்தாமரைகுளம்,ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டர் அவதார தின விழா மாசி மாதம் 20-ந் தேதி அய்யாவழி பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தின விழா நேற்று நடந்தது.இதையொட்டி சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு ஊர்வலமாக செல்வதற்காக நெல்லை, தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவில் திடலில் குவிந்தனர்.இதைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு நாகராஜா கோவில் திடலில் இருந்து அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னால் அய்யா வீற்றிருக்கும் அலங்கரிக்கப்பட்ட வாகனம் சென்றது.அதன் பின்னால் முத்து குடைகளை ஏந்தியும், மேளதாளங்கள் முழங்கிய படியும் அய்யாவழி பக்தர்கள் சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். ராஜவேல் முன்னிலை வகித்தார்.ஊர்வலம் சென்ற பக்தர்களில் பெரும்பாலானோர் கையில் காவி கொடியுடனும், தலைப்பாகை அணிந்தபடியும் சென்றார்கள். மேலும் பக்தர்கள் அனைவரும் அய்யா சிவ...சிவா...அரகரா...அரகரா... என்று பக்தி கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர். அதோடு சில பக்தர்கள் சந்தன குடத்தையும் சுமந்து சென்றார்கள்.ஊர்வலமானது கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பை வந்தடைந்தது. பின்னர் தலைமை பதியின் பெரிய ரத வீதி மற்றும் தலைமைப்பதியையும் சுற்றி வந்து பகல் 12 மணி அளவில் தலைமை பதி முன்பு ஊர்வலம் முடிவடைந்தது. ஊர்வலத்துக்கு அந்தந்த பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு மோர், சர்பத், பழங்கள், இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டன.அவதார தின விழாவையொட்டி தலைமை பதி வளாகம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. அதைத் தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடை நடைபெற்றது. மேலும் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதியின் தெற்கு பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல அன்புவனம், தெற்கு ரத வீதி உட்பட பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவில் கலையரங்கில் அய்யா வழி மாநாடு நடைபெற் றது. மாநாட்டில் அய்யாவழி அறிஞர்கள் பலர் பேசினர். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன.News