ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது: நாகர்கோவிலை குளிர்வித்த திடீர் மழை
Views - 289 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து கடுமையான வெயில் மக்களை வாட்டி, வதைத்து வருகிறது. கோடைகால வெயில் முன்கூட்டியே தொடங்கி விட்டதோ? என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருந்தது. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே இருந்ததே தவிர குறையவில்லை.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக நாகர்கோவில் நகரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படும். ஆனால் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் மலையோரப்பகுதிகளில் மழை பெய்தது. நேற்று நாகர்கோவில் நகரம், கன்னியாகுமரி, கொட்டாரம், பூதப்பாண்டி, மார்த்தாண்டம், சுருளோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவிலில் மதியம் 2.30 மணி அளவில் தொடங்கிய மழை 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளான கேப்ரோடு, கே.பி.ரோடு, அவ்வை சண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, செம்மாங்குடி சாலை, இந்துக்கல்லூரி ரோடு, வடசேரி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஓடிய தண்ணீரில் தத்தளித்தபடி சென்றது. சில இடங்களில் ஆங்காங்கே வாகனங்கள் நின்றதால், நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒழுகினசேரி, ராமன்புதூர் ஆறாட்டுரோடு ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். இதேபோல் தாழ்வான குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிலும் மழை வெள்ளம் புகுந்தது. அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் குடியிருப்புகளின் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைகளை பிடித்தபடியும் சாலைகளில் சென்றதை காண முடிந்தது. இந்த திடீர் மழையால் நகர்ப்பகுதியில் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-பேச்சிப்பாறை- 20.8, பெருஞ்சாணி- 38.4, புத்தன் அணை- 37.2, சிற்றார் 1- 4, சிற்றார் 2- 5.2, பூதப்பாண்டி- 4.2, கன்னிமார்- 3.6, பாலமோர்- 22.4, அடையாமடை- 7 என்ற அளவில் பதிவாகியிருந்தது. நேற்று மாலை நாகர்கோவில்- 95.2 மி.மீ. (9½ செ.மீ.), சுருளோடு- 1 மி.மீ., கொட்டாரம்- 6 மி.மீ., பூதப்பாண்டி-1 மி.மீ. என்ற அளவில் பதிவானது.1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால், வடசேரி சந்தையில் உள்ள சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளி ஒருவர் மட்டும் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுவர் இடிந்து விழும் நேரத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, அங்கு ஏராளமானோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பிய நேரத்தில், சுவர் இடிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர்News