" “If opportunity doesn't knock, build a door.”"

குளச்சல் அருகே வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு? : வாட்ஸ்-அப்பில் பரவிய தகவலால் பரபரப்பு

Views - 327     Likes - 0     Liked


  • சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா வைரசால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற அச்சம் பொதுமக்களிடையே பரவி உள்ளது. இதனால் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இந்தியாவிலும் 28 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
     
    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தில், 26 வயது வாலிபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வாட்ஸ்-அப்பில் பரவுகிறது. இந்த தகவல் உண்மை என நம்பி பலரும் பரப்பி வருகின்றனர்.
     
    இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனா தாக்கப்பட்டதாக கூறப்படும் கிராமத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவர் நாகர்கோவில் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று அந்த மாணவர் நாகர்கோவில் பள்ளிக்கு செல்லும் போது சக மாணவர்கள் அந்த மாணவரிடமிருந்து விலகி சென்றுள்ளனர். இது அந்த மாணவருக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து அந்த மாணவர் பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
     
    இதுதொடர்பாக குளச்சல் அரசு மருத்துவ அலுவலர் கற்பகத்திடம் கேட்டபோது, கொரோனா வைரசால் தாக்கப்பட்ட நபர் யாருக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தவறான தகவல் பரவுகிறது என்றார். யாரோ ஒரு மர்மநபர் தான் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக தகவலை பரப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    News