" “If opportunity doesn't knock, build a door.”"

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் நோய் மேலாண்மை குறித்து தொலைபேசி வழி கலந்துரையாடல்

Views - 305     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு நோய் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தியது. கன்னியாகுமரி தென்னை சாகுபடிக்கு உகந்த மாவட்டமாகும். அதிகமான விவசாயிகள் தென்னை பயிரை நம்பியே விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் தேங்காய்க்கு போதிய விலை சீராக கிடைக்காததாலும் தென்னையில் நோய் அதிகமாக தாக்குவதாலும் மற்றும் பேரிடர் காலங்களில் தென்னை மரங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாவதாலும் விவசாயிகள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தென்னை மரங்கள் பட்டுபோவதும் விளைச்சல் குறைவாகவும் காணப்படுகிறது. அதன் அடிப்படையில் விவசாயிகளிடத்தில் நோய் மேலாண்மை குறித்து வேளாண் அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் லதா அவர்கள் கலந்துரையாடினார். அவர் கூறும் போது ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சியின் தாக்குதல் தென்னை மரங்களில் காணப்படுகிறது. இவை தென்னை இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. இவை 30 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்த ஈக்களாக மாறி காற்றின் திசையில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் கூட்டம் காரணமாக பசை போன்ற கழிவு இலைகளின் மேல் படர்ந்து கேப்னோடியம் எனப்படும் கரும்பூசணம் ஏற்பட ஏதுவாகின்றது. இவ்வாறு மேற்புறம் கருப்பாக மாறிய ஓலையில் பச்சையம் செயலிழந்து மகசூல் குறையவும் வாய்ப்புள்ளது. இதை ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் விளக்கு பொறிகளை பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க தென்னை ஓலையின் அடிப்புறம் தண்ணீரை நன்கு பீச்சி அடிக்க வேண்டும். கிரைசோபாலா இரை விழுங்கிகள் இந்த பூச்சிகளின் வளர்ச்சி நிலைகளை நன்றாக உட்கொள்வதால் இவற்றை பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். இவ்வகை வெள்ளை ஈக்கள் அதிகஅளவு பரவும் போது கிரைசோபாலா இரை விழுங்கிகள், காக்சினெல்லிட் பொறி வண்டுகள் மற்றும் என்காரிஸியா ஒட்டுண்ணிகள் ஆகிய இயற்கை எதிரிகள் தோப்புகளிலே உருவாகும் என்று கூறினார். மேலும் சிகப்பு கூன் வண்டு, கருப்பு கூன் வண்டு, தஞ்சாவூர் வாடல், கேரளா வாடல் நோய்கள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் குரும்பல் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் உர மேலாண்மை குறித்தும் விளக்கம் அளித்தார். இக்கலந்துரையாடலில் அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவன்கோடு மற்றும் கிள்ளியூர் தாலூக்காவிலுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

    News