இதுவரை 20 எம்.எல்.ஏ.க்கள் பாதிப்பு: கிள்ளியூர் தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா - ஆஸ்பத்திரியில் அனுமதி
Views - 291 Likes - 0 Liked
-
நாகர்கோவில்,தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையை பதம்பார்த்த கொரோனா, தற்போது மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டே இருக்கிறது.ஏழை, எளியவர், பணக்காரர் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் தனது பாதிப்பு வளையத்துக்குள் கொரோனா கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் அரசுத்துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரையிலும் தினந்தோறும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவின் கோரப்பிடிக்கு தப்பவில்லை. முதலில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகி விட்டார்.இவ்வாறு கொரோனா தனது ஆக்டோபஸ் கரங்களை ஒவ்வொரு நாளும் அகல விரித்துக் கொண்டே உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 19 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.அதாவது, குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார் கொரோனாவால் நேற்று பாதிப்புக்கு ஆளானார். இவருக்கு வயது 45 ஆகும். இவர் கட்சிப்பணியிலும் சரி, கொரோனா தடுப்பு பணிகளிலும் சரி கடந்த சில மாதங்களாக தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார்.கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதற்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் நேற்று இரவு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர் கொரோனா தடுப்பு பணி மற்றும் தொகுதி மக்களுக்கான பணிகளில் ஈடுபட்ட போது கொரோனா தொற்றுள்ளவர் மூலம் இவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. தற்போது காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் 2-வது முறையாக பரிசோதனை செய்த போது, அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்News