" Love For All, Hatred For None"

நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் சளி மாதிரி சேகரிக்கும் பணி: தளவாய்சுந்தரம் பார்வையிட்டார்

Views - 120     Likes - 0     Liked


 • கன்னியாகுமரி, 
   
  கன்னியாகுமரி மீனவ கிராமம் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் தாங்களாகவே சுய ஊரடங்கை பிறப்பித்து வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து கோவளத்தில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளச்சிங் பவுடர்கள் தூவப்பட்டன. கொரோனா தடுப்பு பணி நேற்று 2-வது நாளாக நடந்தது. மேலும் அப்பகுதி மக்களுக்கு கபசுரகுடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இப்பணிகளை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்
  மேலும் கோவளம் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்குதந்தை பிரபுதாஸ் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.
   
  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், கோவளம் பங்குத்தந்தை பிரபுதாஸ், கோவளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டனி, அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில இணை செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   
  கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பை தடுக்க கடற்கரையில் கடந்த 2002-ம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் ரூ.4 கோடி செலவில் 225 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.
   
  கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி ஏற்பட்ட போது தூண்டில் வளைவு 100 மீட்டர் தூரம் சேதம் அடைந்தது. அதன்பிறகு இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கோவளம் மீனவர்கள் பாதுகாப்புடன் கடலில் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
   
  இந்த கோரிக்கையை ஏற்று தூண்டில் வளைவை ரூ.11 கோடியே 20 லட்சம் செலவில் சீரமைக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கோவளத்துக்கு நேரடியாக சென்று அங்கு உள்ள பங்குத்தந்தை பிரபுதாஸ் மற்றும் மீனவ பிரதிநிதிகளை சந்திந்து பேசினார்.
   
  அப்போது அவர்களிடம் தற்போது கொரோனா தொற்று நீடித்து வருவதால் கோவளத்தில் தூண்டில் வளைவு பணிகளை தொடங்குவதில் காலதாமதம் ஆகிறது. கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்ததும் கோவளத்தில் தூண்டில் வளைவு சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
   
  பின்னர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
   
  நாகர்கோவிலில் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் குமரி மாவட்ட மீனவ மக்களின் நலன் காக்கும் வகையில் கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று மீனவர்களின் நலன் காக்க கோவளம், அழிக்கால், கன்னியாகுமரி பெரியநாயகிதெரு, மேல்மிடாலம், இனயம்புத்தன்துறை மற்றும் இனையம் கிராமம் ஆகிய 6 கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.44 கோடியே 82 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இதில் கோவளத்தில் மட்டும் 265 மீட்டர் நீளம் உள்ள தூண்டில் வளைவு ரூ.11 கோடியே 20 லட்சம் செலவில் புதியதாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிர்வாக அனுமதியும் பெறப்பட்டு விட்டது. உடனடியாக பணி தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
   
  இவ்வாறு தளவாய்சுந்தரம் கூறினார்
  News